அழிவில் இருக்கும் பாரம்பரிய நெசவுத் தொழில்-அரசாங்கம் முன்வந்தால் மீட்டெடுக்கலாம்”
Labels:
சுற்றுசூழல்
சென்னை விமான நிலையத்திலிருந்து வெறும் அரை மணி நேர பயண தூரத்தில் புறநகர் பகுதியில் அமைந்திருக்கிறது அனகாபுதூர் என்னும் நகரம். அடையார் ஆற்றின் கரையில் இருக்கிறது அந்த அமைதியான ஊர். கைத்தறிப் பொருட்களான புடவை,சட்டை,லுங்கி மற்றும் இதர பொருட்களுக்குப் பெயர் போன ஊர்.
image courtesy: Livemint |
தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்த காலமெல்லாம் மாறி, இப்போது அங்கிருக்கும் தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வாழ்வின் தேவைக்கே மிகவும் கஷ்டப்படும் நிலைமையில் இருக்கின்றனர். பல நெசவாளர்கள் தங்கள் குடும்ப செலவுகளை சமாளிக்க சுண்ணாம்பு அடிக்கும் வேலைகளுக்கும் மற்ற தினகூலி வேலைகளுக்கும் செல்ல ஆரம்பிக்கின்றனர். ஒரு காலத்தில் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த கைத்தறிகள் இப்போது நிரந்தர ஓய்வில் இருக்கின்றன. தொழிலாளர்களால் நிரம்பி வழிந்த இடங்கள் எல்லாம் இப்போது அவர்களின் தேவைக்காக வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன.
இந்த அவல நிலை அனகாபுதூரில் மட்டுமல்ல,நெசவு தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இதே நிலைதான்.
வாடிக்கையாளர்களுக்கிடையே பெருகி வரும் தற்காலத்து நாகரிக ஆடைகளின் மோகத்தினாலும்,தொடர்ந்து அரசாங்கத்தால் உதாசினப்படுத்துவதாலுமே நாளுக்கு நாள் இவர்களது நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.
இப்போது அவர்கள் பாரம்பரியத்தை முன்னேற்றுகிற வகையில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையிலும் நிறைய புது விஷயங்களை செய்ய தொடங்கிவிட்டார்கள். வாழை நாரு மற்றும் இலவம்பஞ்சில் செய்யப்பட்ட புடவைகளைத் தயாரித்து வெற்றியும் அடைந்துள்ளனர். வாழை நாரில் தொடங்கி இன்று தேங்காய் நார் சேலை.மூங்கில் நார் சேலை, சோற்றுக் கற்றாழை சேலை, அன்னாசிச் செடி சேலை, கோங்குரா சேலை வரை நெசவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாம் கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் நாரெடுத்து, காய்கறி, பழங்கள், பட்டைகளில் வண்ணமெடுத்து நெசவு செய்யபடுகிறது இந்த சேலைகள்.
ஜப்பானிலும் வாழை நாரை பயன்படுத்துகின்றனர். பிலிப்பைன்ஸில் அன்னாசி இலைகளில் இருந்தும் இதே முறையில் ஆடைகள் தயாரிக்கின்றனர். இந்தியாவிலும் இதைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
அனகாபுதூர் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சேகரும் சில நெசவாளர்களும் சேர்ந்து செய்த முயற்சி பலனைத் தந்துள்ளது.இப்போது அவர்கள் நிறைய மகளிர் குழுக்களையெல்லாம் இணைத்து வாழை நாரிலிருந்து நூல் தயாரிப்பது,அதைப் பயன்படுத்தி புடவை மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பது என பல வேலைகள் செய்து வருகின்றார்.அங்கிருக்கும் நெசவாளர்களின் குடும்பங்களை முன்னேற்றும் பொறுப்பில் செயல்படுவதால் சேகர் நெசவாளர்களிடையே நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறார்.
சேகரிடம் நாங்கள் தொலைபேசியில் பேசியபோது,
"இருபது வருடத்திற்கு முன்,ஒரு வார இதழில் ராமாயணத்தில் வரும் ஒரு கதையைப் படித்தேன்.அதில் ராவணனால் கடத்தப்பட்ட சீதை, தன் உடைகளை மாற்றிக் கொள்ள நினைத்தால்.அப்போது ராவணனிடம் அதைக் கேட்க விரும்பாமல் அனுமனிடம் வாழை நாருகளைக் கொண்டு வரச் செய்தார்.அதிலிருந்து தனக்கான ஒரு ஆடையை நெய்தார் என்று படித்தது எனக்கு வியப்பாய் இருந்தது.நாங்கள் இப்போது வாழைத் தண்டிலிருந்து, வாழை நாரை எடுத்து நூலிழை செய்வதில் வெற்றியடைந்துள்ளோம்.கடந்த இரண்டு வருடங்களில் நூறு சதவீதம் சுத்தமான வாழை நார் புடவைகள் தயாரித்து நூற்றிற்கும் மேற்பட்ட புடவைகளை விற்றிருக்கிறோம்.எங்களது புடவைகளுக்குப் பெரிய வகையில் வரவேற்பு இருக்கிறது.ஆனால் எங்களிடம் பெரிய தயாரிப்புகளுக்கு போதுமான அளவில் நூலிழைகள் இருப்பதில்லை.எங்களுக்கு அமெரிக்கா,சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
வாழை நார் சேலைகளுக்கு நல்ல மதிப்புள்ளது.
என்னதான் வரவேற்புகளும்,விற்பனைகளும் இருந்தாலும் அரசாங்கத்தின் உதவியில்லாமல் எங்களது தயாரிப்பை அதிகப்படுத்த முடியாது.இயந்திரங்கள் வாங்குவதற்கும்,அதிகரிப்பதற்கும் நிறைய பணம் தேவைப்படுகிறது.எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.ஆனால் எந்தப் பயனுமில்லை.
இருபத்தைந்து வருடத்திற்கு முன்னர் இங்கு ஐந்தாயிரம் கைத்தறிகள் இருந்தன.இப்போது வெறும் முன்னூற்றைம்பது கைத்தறிகளே மிச்சம் இருக்கின்றன.
தனியார் நிறுவனங்களும்,அரசு சார்பற்ற அமைப்புகளும் அவர்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மலிவான விலைக்கு அவர்களின் பொருட்களை விற்கச் சொல்கின்றனர்.இல்லையெனில் அவர்களின் நிறுவனத்தின் பெயரில் பொருட்களை விற்றுக் கொள்ள ஒப்பந்தம் போடச் சொல்கின்றனர்.இதனால் அவர்களையும் நம்ப இயலவில்லை.
“சென்னையிலிருக்கும் நெசவுக் காட்சிக்கூடங்களில் எல்லாம் என்னைப் பேச அழைக்கின்றனர். விற்பனைகளும் அதன் மூலம் பெகுகிறது. இருப்பினும் அரசாங்கம் உதவினால் இன்னும் பல குடும்பங்கள் பயன் அடையும், எங்கள் தொழிலை நல்ல உயரத்திற்குக் கொண்டு செல்வோம்" என்று வருத்தப்பட்டார். இதைவிட வியப்பளிக்கும் ஒன்று சமிபத்தில் சேகரும் சக நெசவாளர்களும் இணைந்து வாழை நார் பயன்படுத்தி ஆண்கள் மிகவும் விரும்பி அணியும் ஜீன்ஸ் மற்றும் சட்டைகள் தயாரித்து வருகின்றனர்.
தி லேன்டர்ன் குழுமம் அவருக்கும் அவரைச் சார்ந்த நெசவாளர்களுக்கும் ஆதரவளிக்கும் என உறுதியளிக்கிறோம்.
No comments: