health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

சிவப்புப் பட்டியல்: ஹைனா (எ) கழுதைப்புலி

1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தையும் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். 
இயற்கையான மூலவளங்களைப் பாதுகாக்க செயல் பட்டு  வரும் இந்த அமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவெடுத்து இருக்கும் சூழலியல் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை ஆராயிந்து அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் சவால்களை  எதிர்கொள்ளவும் உதவுவதே ஆகும். 
இது தொடர்பாக, 1963 முதல் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆண்டுதோறும்  சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் பல்வேறு தாவர - விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலையை பிரித்து வகைப்படுத்தி வெளியிடுகிறது. அவற்றில் முக்கியமான சில நிலைகள்: 
  • இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (EX) (Extinct)
  • இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) (Extinct in the Wild)
  • மிக அருகிய இனம் (CR) (Critically endangered) 
  • அருகிய இனம் (EN) (Endangered)
  • அழிவாய்ப்பு இனம் (VU) (Vulnerable)
  • அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT) (Near Threatened)
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC) (Least Concern)
  • தரவுகள் போதாது (DD) (Data Deficient)
  • மதிப்பீடு செய்யப்படவில்லை (NE) (Not evaluated)


சிவப்புப் பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட தாவரங்கள்,  மற்றும் விலங்குகள்  மரபணு வேறுபாடு (genetic diversity) மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்க்கும் (building of ecosystem) அவற்றை ஒழுங்கு படுத்துவதற்கும் உதவியாக உள்ளது. 

இனி உங்களுக்கு வாரம் ஒரு விலங்கை பற்றி எழுதுகிறேன். இதன் ஆரம்பமாக இந்த வாரம் ஹைனா (என்கிற) கழுதைப்புலி பற்றி பார்போம்.

உலக அளவில், மனிதனின் தீராப் பேராசையினால்  பல விலங்குளின் எண்ணிக்கை இன்று குறைந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் ஒன்று தான் இந்த கழுதைப்புலி.
கழுதைப்புலி காணப்படும் இடங்கள் பச்சை நிறத்தில்
கழுதைப்புலிகள் உலகளவில் இந்தியா, தென்மேற்கு ஆசியா,தெற்கு ஆசியாப்பகுதிகள்,ஆப்பிரிக்காவின் சமவெளிப் பகுதிகளிளே அதிகம் காணப்படுகிறது. இது புதர் மற்றும் காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும்.

கழுதைப்புலிகள் ஒரே இடத்தில் வசிக்காது; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும். கழுதைப்புலிக்கு கடுவாய், கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, வங்கு என்று பல பெயர்கள் உண்டு.

கழுதைப்புலி் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும். இதன் உடல் முழுவதும் 5 முதல் 9 அடர்த்தியான  கறுப்பு நிறத்திலான வரிகள் காணப்படும். இதன் முகமுன்பகுதி, பிடரி மயிர்கள், தோள்பட்டை மற்றும் காதுகள் கறுப்பு நிறத்திலானவை. 


இவ்விலங்கு அச்சத்திலோ அல்லது சினத்திலோ அல்லது மற்ற விலங்கை பயமுறுத்தவோ தன் உடல் மயிர்களை செங்குத்தாக நிமிர்த்தும் ("சிலிர்க்கும்"), அப்பொழுது இதன் உருவம் இயல்பான அளவைவிட சற்று பெரிதாக காணப்படும். 

இவ்விலங்கு இந்தியாவில் அதிகமாக இராஜஸ்தானிலும் தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் ,முதுமலைக் காடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இதன் எண்ணிக்கை 1,000-3,000 வரை உள்ளது. இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் 1.2 முதல் 1.45 மீட்டர் உயரமும், 26 முதல் 41 கிலோ எடையும் கொண்டவை. ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகளின் உடல் அமைப்பில் வேறுபாடுகள் கிடையாது.
கழுதைப்புலிகள் காட்டின் துப்புரவாளர் (scavenger) என அழைக்கப்படுகிறது. இவை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டிருப்பினும் பெரும்பாலும் பிற கொன்றுண்ணிகள் விட்டுச்செல்லும் எச்சங்களையே தின்னும், மேலும் சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும் . தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்புலிகளின் உணவைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சிகள், இவை புள்ளி மான், முயல் மற்றும் கால்நடைகளை உண்பதாக தெரிவிக்கின்றது. 
கழுதைப்புலிகள் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் விலங்கு வகையை சார்ந்தது.(Nocturnal).  கூட்டமாகத்தான் உணவினைத் தேடி அலையும். வேட்டையாடப்பட்ட உணவுகளை,வேட்டையாடிகளிடம் இருந்து கவர்வதில் புத்திசாலித்தனமான முறைகளைக் கையாளுகிறது இந்த விலங்கு. 


அழுகிய உணவுகளைத் தின்பதால்,இதன் உடலில் எப்பொழுதும் ஒருவிதமான துர்வாசனை இருந்து கொண்டே இருக்கும். இது மற்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. 


சிறிய தோற்றம் கொண்டாலும் உலகிலேயே மிக வலுவான தாடை அமைப்புகள் கொண்ட நிலவாழ் உயிரினங்களுள் இதுவும் ஒன்று. எப்படிப்பட்ட எலும்புகளையும் ஒரே கடியில் நொறுக்கிவிடும். சில சமயங்களில் வலிமையான விலங்கு என்று கருதப்படும் சிங்கங்களைக் கூட கும்பலாக வேட்டையாடி உண்ணும் அளவிற்குத் திறன் படைத்தவை. நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்றல் இவைகள் Hyena butter  எனப்படும்  அதன் கழிவை வைத்து தனது வழியை நினைவில் வைத்துக் கொள்கிறது.

உலகிலேயே புலியும்,கழுதைப் புலியும்,வெளிமானும்,யானைகளும் ஒன்றாகப் பங்கிட்டுக் கொள்ளும் வனப் பிரதேசம் உள்ள பகுதி நமது பெருமைக்குரிய மோயார் பள்ளத்தாக்குதான். திம்பம் தலமலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு காமிராவில் கழுதைப் புலி பதிவான பிறகுதான்,இவை குறித்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகிறது.


ஹைனா இந்தியாவில் Nearly threatened வகையில் உள்ளது. அப்படி என்றல் தன்பொழுது இவைகளுக்கு அதிக ஆபத்து இல்லை என்றாலும் எதிர்காலத்தில் இதற்கு ஆபத்து அதிகம்.


இந்தியாவில் கழுதைப்புலிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் சரியாக கிடைக்கவில்லை. கழுதைப்புலிகள்-மனித பிணக்குகளே (Hyena-Human Conflict) இவ்விலங்கின் வாழ்விற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமைகிறது. இவ்விலங்கு காடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளிலுள்ள கால்நடைகளை தாக்குவதாலும் மனிதனுக்கு அச்சுறுத்தலாக இருபதாலும் இந்திய உற்பட உலகில் பல இடங்களில் இவற்றை விஷம் வைத்து கொன்று விடுகின்றனர்.. மேலும் இவ்விலங்கின் உடலுறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையால், இவை சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்படுகின்றன. இதன் வாழ்விட சீர்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.


ஹைனாவால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
  1. அது ஏற்படுத்தும் ஒலியை வைத்து நம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வாளர்களால் கணிக்க முடிகிறது என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
  2. மீதமான மாமிசங்களை அது உணவாக உட்கொள்வதால் நம் சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்க உதவியாக உள்ளது.
அவ்வளவு பெரிய யானைகள் அழிவதற்கே மனிதர்களால் ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றால்,வெறும் 40 கிலோ எடையுள்ள இந்த விலங்கின அழிவிற்கு மட்டும் நம்மால் லட்சம் காரணங்களைக் கூற முடியாத என்ன?

மக்கள் தொகை மட்டுமே அதிகரித்துக் கொண்டு வரும் நம் நாட்டில் விலங்குகள் மற்றும் பல உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. 
ஆறு அறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் உயிரினங்களுக்கு செய்யும் உதவி இதுதானா? இந்த பூமியில் வாழ நமக்கு உரிமை உண்டெனில்; அதே உரிமை நம்மை சுற்றி வாழும் பிற உயிரினங்களுக்கும் உண்டு. 
சிந்தித்துப் பாருங்கள்.
கௌதமி முத்துக்குமார், Outreach Lead, The Lantern

2 comments: