ஒரு ரம்மியமான நாளின் அதிகாலை வேளையில் குட்டி மது படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டு இருந்தாள். எதோ கிறீச் என்று சத்தம் கேட்டது. யாரோ கதவைத் திறக்கும் சத்தமாக இருக்கலாம். அந்தச் சத்தம் தந்த தொல்லையால் தலையணையை இன்னமும் இறுக பற்றிக்கொண்டு அவள் தூங்க ஆரம்பித்தாள். அவளின் தந்தை தான் உள்ளே வந்திருந்தார். தூங்கும் மழலையின் அழகினில் மூழ்கியபடி நெடுநேரம் நின்று கொண்டிருந்தார். தூக்கத்தில் இருந்து இயல்பாக எழுந்த மது அப்பா நின்று கொண்டிருப்பதைக் கண்டு அசந்து போனாள்.
"என்னப்பா ஆச்சு?"
"தங்கம்! நீ ரொம்ப அழகா இருக்கே குட்டிமா"
"நீங்க லூசு ஆகிட்டீங்களா அப்பா?"
"ஆமாம்..ஆமாம்"
"சரி சொல்லுங்க"
"செல்லக்குட்டி நாம நீ போகணும்னு ரொம்ப ஆசைப்பட்ட ஒரு இடத்துக்குப் போறோம்"
மது எங்கே எல்லாம் தான் போக ஆசைப்பட்டோம் என்று நினைவுபடுத்திப் பார்த்தாள். சூரியன் உதயமாகி விட்டதால் கண்டிப்பாகப் பீச் இல்லை. கடந்த வாரம் ஆதரவற்றோர் இல்லம் போனதால் அதுவும் இல்லை.
"ஹையா .. நாம ஜூவுக்குப் போகப்போறோம். நான் திரும்பி வந்து அங்கே பார்த்தது, அதுல ஜாலியா இருந்தது எல்லாத்தை பத்தியும் எழுதுவேனே!" என்று துள்ளினாள்
மகளின் துள்ளலை கண்களில் அள்ளிக்கொண்டிருந்த தந்தை மாறாத புன்னகையும், கண்களில் நேசமும் ததும்ப அவரின் குட்டிம்மாவை தழுவி "ரெடி ஆகு தங்கம். போகலாம்" என்றார். தந்தையின் கன்னத்தில் செல்லமாக முத்தம் பதித்துவிட்டு மானைப்போலத் துள்ளிக்கொண்டு போனாள்.
மது பள்ளியில் படுக்கும் துடிப்பான, அழகான சிறுமி. உயிர்கள் மீது எல்லையற்ற அன்பு செலுத்தும் குணம் கொண்டவள். "நானும் ஒரு உயிர். மனுஷின்னு பெருமையெல்லாம் பட்டு என்னப்பா பண்ணப்போறோம்" என்று கேட்கிறவள். அப்பா நன்றாகக் கவனிப்பவர், கற்றுக்கொண்டே இருப்பார்.
"அப்பா நான் ரெடி..நீங்க ரெடியா?"
"நானும் மது! "
மகளுக்கு விலங்கியல் பூங்காவுக்குப் போவது பிடித்திருக்கிறதா என்று அப்பாவுக்குச் சந்தேகம்.
“நல்லா இருக்கியாமா?”
“நான் ரொம்பச் சூப்பரா இருக்கேன்பா” அப்பா எதைக்கேட்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவளாக மது இப்படிச் சொன்னாள்,
“நான் இந்த விலங்குங்க, அவை இருக்கிற இடம், எப்படி அதுங்களுக்குள்ள பேசிக்குது, எப்படிச் சத்தம் போடுது, பெரிய சிங்கம் எப்படிக் குட்டி சிங்கத்துக்குச் சொல்லித் தருது, எப்படி வேட்டையாடுது எல்லாத்தையும் பார்க்க போறேன்னு ரொம்பச் சந்தோசமா இருக்கேன். அம்மா என்னைப் பார்த்துக்கிற மாதிரி, நீங்க என்னைக் கவனிச்சுக்கிற மாதிரி அங்கேயும் இருக்கும்னு நம்புறேன். அதுங்களும் நம்மளை மாதிரி ஒரே குடும்பமா சந்தோசமா இருக்கும்னு நினைக்கிறேன்”
மகளின் பரவசத்தைக் கண்ட தந்தை உள்ளுக்குள் அவளைப் பாராட்டியபடியே வாஞ்சையோடு மதுவின் தலை முடியை கோதி விட்டார்.
“ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விலங்கியல் பூங்கா இருக்கணும் அப்பா”
“கவலைப்படாதே தங்கம் நாம பிரதமருக்கு லெட்டர் போடுவோம்”
“ம்ம்ம்”
இருவரும் உயிரியல் பூங்காவுக்கு நுழைந்தார்கள். மகிழ்ச்சி பொங்க விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதும், இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை தந்த அப்பாவுக்கு உள்ளுக்குள் நன்றி சொல்லியபடியும் மது குதூகலித்துக் கொண்டிருந்தாள்.
பாதையில் நடக்கிற பொழுது பெரிய மரங்களால் பாதையின் ஓரங்கள் அலங்கரிகரிக்கப்பட்டிருப்பதைக் கண்டால். நடைபாதையில் மலர்களை அவை தூவிக்கொண்டு இருந்தன. ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வடிவம், அளவு, மலர்கள் என்று ஆனந்தப்படுத்திக் கொண்டு இருந்தன. மலர்களின் வாசனை, அவற்றின் வகைகள் ஆகியன பால் மேகங்களின் நடுவே காற்றினில் நடக்கும் தேவதை போல மதுவை உணர வைத்தன. இயற்கையின் ரம்மியம் அவளை நிறைத்தது.
“தங்கம் இங்கே நீ பாக்கிறது தான் நிஜமான கிளி. நம்மூரில் பார்க்கிறது பாரகீட்” என்று ஆச்சரியப்படுத்தினார்.
“அப்பா அஞ்சு கலரில் கலக்கலா இருக்கு. அழகாவும் இருக்கு. ஏன் நம்மூரில் இந்தக் கிளி வெளியே எல்லாம் இல்லை?”
“இது நம்மூர் பறவை இல்லைமா. அவங்க நாட்டில் அது இயற்கையில் இருக்கும். அதுக்குத் தேவையான சாப்பாடு, சூழல், வாழ்விடம் இதெல்லாம் நாம தரமுடியாது இல்லையா?”
“ஏன் அது பறக்கல? அது ஏன் கூண்டில் இருக்கு? அம்மா கிளி பறக்கலை அப்படினா எப்படிக் குட்டிக்கிளி கூண்டில இருக்கிறப்ப பறக்கும்? குட்டி எல்லாம் பாவமில்லையா அப்பா
“அது கூண்டில இல்லைனா நாம எப்படிமா பாக்க முடியும்?”
“இறக்கை இருந்தா கிளி பறக்கும்னு எங்க டீச்சர் சொன்னாங்க. இறக்கை இருந்தும் பறக்க முடியலை அப்படினா என்னப்பா பயன்? இந்த இறக்கை எல்லாம் துருப்பிடிச்சுடாதா? இப்படிக் கொடுமை பண்ணுறது தப்பில்லையா?”
மகளின் சரமாரியான கேள்விகளில் திணறிப்போன தந்தை மயிலை நோக்கி மகளைத் திசை திருப்பினார்.
“எவ்ளோ அருமையா இருக்கு இல்லை? உன்னைப் போலவே...இதான் நம்ம தேசிய பறவை” “அதுவும் கூண்டில தானே இருக்குப்பா” Dad - (speechless)
கூண்டை சுற்றி மயிலின் நாட்டியத்தைப் பலரும் ரசித்துக்கொண்டு நின்றார்கள். ஆனால், மயிலின் கண்களை உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தாள். யாரோ ஒருவர் கண்ணைக்கூசச் செய்யும் வெளிச்சத்தோடு படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அவை மயிலுக்கு அச்சத்தை உண்டு செய்வது அவளுக்குப் புரிந்தது. ப்ளாஷ் லைட் எப்படி மயிலை அவதிக்கு உள்ளாக்குகிறது என அவள் உணர்ந்துகொண்டாள். அப்பா தள்ளி நின்று கொண்டு இருப்பதைக் கண்டாள்
“ஏன் அப்பா தள்ளி நிக்கறீங்க?”
“இல்லை ப்ளாஷ் லைட் அப்பாவுக்கு மைக்ரேனை தூண்டி விட்டுறும். அதான் தள்ளி நிக்குறேன்”
“ஏன் அப்பா மயிலுக்கு மைக்ரேன் வராதா?”
அப்பா பேச்சற்றுப் போனார்.
“ப்ளாஷ் லைட் என்னமோ பண்ணுதுமா. முன்னாடி போலாமா?”
“முன்னாடி போகலாம் அப்பா. எல்லாருக்கும் மைக்ரேன் இருந்தா இப்படி நீங்களும், மயிலும் கஷ்டப்பட வேணாமில்ல. எல்லாருக்கும் வலி புரிஞ்சிருக்கும்”
இருவர் பேசிக்கொள்வதைக் கேட்கிறார்கள்
X – மச்சி மயில் ஆடுறதை மிஸ் பண்ணிட்டேன்
Y – காசு கொடுத்தா மயில் திரும்பி ஆடுமா?
X – இடி இடிச்சா மயில் ஆடுமாம் .
Y –என் ஸ்மார்ட் போனில் இருந்து இடி சத்தத்தை ப்ளே பண்ணவா?
மது அப்பாவின் கண்களைப் பார்த்தாள்
“மயில் சந்தோசமா இருந்தா தான் தங்கம் ஆடும். இடி இடிச்சா இல்லை”
“இப்படிக் கூண்டில் அடைபட்டு சுத்தி எல்லாரும் கத்திக்கிட்டு, தொல்லை பண்ணிக்கிட்டு, லைட் அடிச்சிக்கிட்டு இருந்தா மயில் சந்தோசமா இருக்குமா அப்பா”
அமைதியாக மகளின் கைகளைப் பற்றிக் கொரில்லா இருந்த கூண்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே ஒரு ஜோடி கொரில்லாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் போட்டும்,பழங்களைக் காண்பித்தும் அவர்கள் கவனத்தைக் கவர முயன்றார்கள். கொரில்லா கண்டுகொள்ளவில்லை.
கொரில்லாவோடு புகைப்படம் எடுக்க விரும்பி போய்க்கொண்டு இருந்த நபரை உதவிக்கு அழைத்தார்கள்.
“அந்த மிருகம் பின்னாடி தெரிய ஒரு படம் எடுங்களேன்”
“கொரில்லா தெரியவா”
“ஆமாம்”
“அது கொரில்லாங்க”
“மூன்று பேரையும் ஒண்ணா போகஸ் பண்ணி எடுங்க”
போஸ் கொடுப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கொரில்லா ஓய்வெடுத்துக்கொண்டு இருந்ததால் அதன கவனத்தை ஈர்க்க அதன் மீது கற்களை எறிந்தார்கள். அது தவறென்று படம் எடுக்க வந்தவர் பாடம் எடுக்க இவர்கள் கற்களை எறிவதை நிறுத்தினார்கள். என்றாலும் அசராமல் தாங்களே கொரில்லா தெரிய செல்பி எடுத்துக்கொண்டார்கள்.
“இங்கே ரெண்டு கொரில்லா இருக்கு மது. ஒன்னு தண்ணிக்குப் பக்கத்தில், இன்னொன்னு கல்லு மீது படுத்து இருக்கு” “ஏன்ப்பா நத்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாம இருக்குங்க” “இல்லைமா அதுங்க டயர்டா இருக்குங்க” “அதான் ஏன்?” அதுங்க மழைக்காட்டில் வாழுற மிருகங்க. அங்கே தினமும் மழை பெய்யும். குளிர்ச்சியா, நல்ல கதகதப்பா இருக்கும். இங்கே சூடா இருக்கும். அதுங்க இடத்தில கூட்டமா இருக்கும். இங்கே மழையும் இல்லை. அதான் இப்படி..”
மகள் புரியாதது போல விழிக்க அப்பா விவரமாக விளக்கினார்:
“கொரில்லாக்கள் காடுகளில் இயற்கையா பெரிய எண்ணிக்கையில் பெரிய மரத்தில் வாழும். அங்கே சூரிய வெளிச்சமே கண்ணில படாத மாதிரி இறுக்கமா வளர்ந்த மரத்தில் வாழும். ரொம்ப வெப்பநிலை அதிகம் அப்படினாலும் மழை பெய்ஞ்சு ஜில்லுனு பகலை மாத்திடும். இதனால் அங்க வாழுறது சுலபம். வெப்பநிலை, மழை, மரங்கள் இணைஞ்சு கொரில்லாக்கள் வாழ உகந்த இடத்தை உருவாக்குது. கூட்டமா அங்க வாழுறப்ப ஒன்னு இன்னொன்னை பாசமா பார்த்துக்கும். குட்டி குரங்குக்கு எப்படி உணவு தேடுறதுன்னு சொல்லித்தரவும் செய்யுங்க. விளையாட்டு, பத்திரமா இருக்கிறது எல்லாமே கத்துக்குங்க”
இங்கே ஒரே சூடா இருக்கும். மழையும் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும். அதுங்க வாழுற இடத்தில இருக்கிற அதே மரம் இங்கே வளராது. இதனால் இங்கே அநாதை மாதிரி இருக்குதுங்க. அதான் சோர்ந்து போய்க் கிடக்குதுங்க. இவ்ளோ சூடான இடத்தில் இருக்கிறதால அரிக்கவும் செய்யலாம்”
மது தன்னுடைய வலது கையில் இருந்த தழும்பை சுரண்டியபடி “இது ஞாபகம் இருக்கா அப்பா?
“இருக்குமா...நீ சூடா ஓவனில் சுட்டுகிட்டே”
“அன்னைக்கு எனக்குப் புண்ணான அப்ப நீ எப்படி அழுதே. என்னைவிட நீ தான் அதிகமா அழுதே. இன்னமும் மறக்க முடியல. இந்தக் கொரில்லா காலிலும் தழும்பு இருக்காதா அப்பா? தினமும் காயம் உண்டாகாத? கொரில்லா அப்பா, அம்மா இதைப் பார்த்தா எப்படி அழுவும்?”
தந்தை மீண்டும் பேச்சற்றுப் போனார்.
“நாம முன்னாடி போய்ப் பார்க்கலாம் அப்பா”
“சரிம்மா”
சிங்கங்களின் செயற்கை வாழ்விடத்துக்கு வளைவான பாதை அழைத்துச்செல்கிறது
“இதுதான் சிங்கம் இருக்கிற இடம் தங்கம்!”
“ஆமாம்பா சிங்கத்தைக் கூண்டுக்குள்ள வெச்சிருக்கிற இடம்”
மகளின் மனநிலையை உணர்ந்த தந்தை விருப்பமே இல்லாமல் முன்னோக்கி நகர்கிறார்.
கடுமையான அமைதி நிலவுகிறது.
சில சிங்கங்கள் மரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றன. சில மரங்களுக்கு அப்பால் தெரிந்தன. வேறொரு திசையில் சில மீட்டர்கள் தள்ளி சிங்கத்தின் கர்ஜனையை இருவரும் கேட்டார்கள். மதுவும், அப்பாவும் கண்ணாலேயே பேசிக்கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார்கள். அங்கே சிங்கம் சிறிய குகையில் இருப்பதைக்கண்டார்கள்.
கூண்டுக்கு அருகில் மது போனாள். சிங்கத்தின் கண்களை உற்றுப்பார்த்தாள். காட்டின் ராஜா தொடர்ந்து கர்ஜனை செய்தபடி கூண்டையே வலம் வருவதைக் கண்டாள். மகள் சிங்கத்தின் கூண்டுக்கு வெகு அருகில் நிற்பதை பார்த்த தந்தை மகளைக் கொஞ்சம் தள்ளி நிறுத்த முயன்றார். எப்பொழுது தன்னுடைய முடிவில் விடாப்பிடியாக நிற்கும் மகள் அதைவிட்டு நகர மறுக்கவே அப்படியே விட்டுவிட்டார்.
சிங்கத்தின் தலையைச் செயற்கையாகச் சுழல்வதை அவள் பார்த்தாள். இரும்புக்கம்பியை பல்லால் கடிக்க முயன்று அது தோற்றதை கண்டாள். கர்ஜனை செய்து அலுத்துப்போய்ச் சிங்கம் குகையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டது. கூண்டில் தன்னுடைய தலையை இடித்துக்கொண்டது. சில மணித்துளிகள் கழித்து முகத்தைத் தரையில் வைத்துக்கொண்டது. கண் விழிகள் ஒரு முனையை நோக்கி நகர்ந்து மதுவை அது பார்த்தது. அதன் கண்கள் பால் வெண்மை நிறமாக இல்லாமல் அயர்ந்து தெரிந்தன. சிங்கத்தின் கண் இமைகள் மூடிக்கொண்டன. அதன் ஓய்ந்து போன கண்களை இனி மதுவால் பார்க்க முடியாது.
அப்பாவை மது எல்லையற்ற துயரத்தோடு நோக்கினாள்.
“அது தூங்குது குட்டிமா”
“ஆமாம் சிங்கராஜா மூச்சு விடுறார்”
“எதாச்சும் பேசும்மா”
“இல்லைப்பா ஒண்ணுமில்ல”
“பரவாயில்லை சொல்லுமா”
“என்னைக்காவது ஆபிஸ் முடிஞ்சு நீங்க வீட்டுக்கு வரப்ப நானும் அம்மாவும் வீட்டில இல்லைனா எப்படி இருக்கஊம் உங்களுக்கு...என்ன பண்ணுவீங்க?”
“அப்படியா பயந்து போயிடுவேன். எங்கெங்கேயோ தேடுவேன் மா”
“நாங்க எங்கேயோ போறோம்னு லெட்டர் எழுதி வெச்சுட்டு போனா? எப்படியிருக்கும். என்ன செய்வீங்க?”
“தனியா சோகமா உங்களை நினைச்சுக்கிட்டு உட்கார்ந்து இருப்பேன். உங்களோட லெட்டரை திரும்பி திரும்பி படிப்பேன். உங்க படத்தையெல்லாம் பாத்துக்கிட்டே இருப்பேன்”
“எவ்ளோ நாளைக்கு அப்பா?”
“ஒரு நாள், இல்லை அதிகபட்சம் ரெண்டு நாள்”
“ஒரு மாசம் அப்படினா?”
“என்னம்மா விளையாட்டு இது?”
“வருஷக்கணக்கா விட்டுட்டு போயிட்டோம் அப்படினா?”
“இந்தப் பேச்சை இதோட விட்டுருவோம்”
“அப்பா இது கண்டிப்பா நடக்காது. அப்படி நடந்தா எப்படியிருக்கும்? என்ன பண்ணுவீங்க. ப்ளீஸ் சொல்லுங்க அப்பா”
“நான் தனியா இருப்பேன். ரொம்ப மனசளவில் கஷ்டமா இருக்கும். என் நிம்மதி, சந்தோசம் எல்லாம் போயிடும். ரொம்ப மன உளைச்சலா இருக்கும். உங்களைத் தேடி எப்படியாவது கண்டுபிடிப்பேன்”
(மகளை இறுக அணைத்துக்கொண்டு) அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன். ஏன்மா இப்படியெல்லாம் கேட்கிறே?”
தனியாக, சோர்ந்து, உடலளவில், மனதளவில் நொந்து போயிருக்கும் சிங்கத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு, “சரிப்பா போகலாம்” என்றாள் மது.
முன்னோக்கி நகர்ந்த தந்தையின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட மது கண்ணீர் ததும்ப, “அப்பா நாம இனிமே இங்கே எதையும் பார்க்க வேணாம்!”
“வீட்டுக்குப் போகலாமா தங்கம்?”
ஆமாம் என்பதாக மதுவின் தலை அசைந்தது.
“சரி சாப்பிட்டுப் போகலாம்”
வீட்டை நோக்கி போய்க்கொண்டு இருக்கையில் பசுக்கூட்டம் ஒன்று கடந்தது. இயல்பாக ஹார்ன் அடிக்கும் அவர் மகளுக்கு அது பிடிக்காது என்பதால் பிரேக்கை போட்டார். அப்பொழுது ஒரு கேள்வி அவரை அரித்து எடுத்து. “ஏன் பசுக்கள் நகரத் தெருக்களின் கழிவுகள், பேப்பர் ஆகியவற்றை ஏன் ப்ளாஸ்டிக்கை கூட உண்கின்றன? யார் காரணம் ?
இவரைப்போலச் சிலர் வண்டியை நிறுத்தினார்கள். பலர் வேகமாக ஹார்ன் அடித்தார்கள். அறிவில்லாத மாடுகள் என்று அவற்றைப் பெரும்பாலானவர்கள் திட்டிக்கொண்டு இருந்தார்கள். ஹார்ன் அடிப்பது ஒலி மாசு என்று அவர்கள் மறந்துவிட்டார்கள். (நாகரீகம் மிகுந்த மனிதர்கள், காட்டுமிராண்டி மாடுகள்
“மனசாட்சி வந்தால் பெரும்பான்மையின் ஆதிக்கம் வெளியேறும்”
மதுவின் அப்பாவுக்கு எண்ணற்ற சிந்தனைகள்
உயிர்களை நேசிக்கும் மிகச்சில மனிதர்களில் நானும் ஒருவன். இந்தச் சிறுபான்மையினர் ஹார்ன் கொடுப்பதில்லை, இவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை.
இன்றைக்கு அம்மாவைப் பற்றிப் பேசி என் குழந்தை ஒரு தாய் மனம் என்ன செய்யும் என்று காட்டினாள். ஆறாவது அறிவை பயன்படுத்துவது வெறும் தரவுகள், எண்ணிக்கைகளை விட மேலானது என்று இன்றைக்குப் புரிந்துகொண்டேன்.”
எனக்கு இன்று அவள் மீண்டும் ஜனனம் தந்தாள். இவளை நான் குழந்தை என்பதா, அன்னை என்பதா. என்னவாக இருந்தாலும் இவள் என் வாழ்க்கையின் மாணிக்கம்
வீடு வந்திருந்தது
“தங்கம் என் கண்ணில்ல.. எனக்குக் கிடைச்ச வரம்”
“அப்பா ஒரு உயிரியல் பூங்கா கூட நாட்டுக்கு தேவையில்லை. அதுங்க எல்லாம் அதுங்க இடத்தில சந்தோசமா இருக்கட்டும்.”
“அப்பா உயிரியல் பூங்கா அப்படினா என்ன?”
விலங்கியல் பூங்கா என்பது பல்வேறு மிருகங்களின் தொகுப்பு வைக்கப்பட்டிருக்கும் இடமாகும்
மது உயிரியல் பூங்காவைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தை எழுதுகிறாள்:
உங்களின் உயிரியியல் பூங்கா எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே கூண்டுகளில், மூடப்பட்ட இடங்களில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கிறீர்கள். அவை சிறகை விரித்துப் பறக்கவில்லை, தங்களுக்கான உணவை வேட்டையாடவில்லை, அவை எப்படித் தங்களைக் காத்துக்கொள்வது என்று குட்டிகளுக்குப் பாடம் எடுக்கவில்லை. இங்கே அவற்றுக்குப் பிறக்கும் குட்டிகளும் பறப்பது, வேட்டையாடுவது ஆகியவற்றை அறிவதே இல்லை. இந்த மிருகங்களும், அவற்றின் குட்டிகளும் என்ன தவறு செய்தன? அவை தனிமைப்படுத்தப்பட்டு அவற்றின் இயற்கையான வாழ்விடத்தை விட்டு நகர்த்தப்பட்டுள்ளன. அவை மகிழ்ச்சியாக வாழவும் போவதில்லை, நிம்மதியாக இறக்கவும் முடியாது.
உங்களின் உயிரியியல் பூங்கா எனக்குப் பிடிக்கவில்லை
உயிரியல் பூங்காக்கள் விலங்குகள் வாழாத இடங்களில் அவற்றின் பாதுகாப்பது என்று சொல்லி செயற்கையான மூடப்பட்ட இடங்களில் நலம் மிகுந்த விலங்குகளைப் பாதுகாக்கிறார்கள். இவை பாதுகாத்தலை செய்வதோடு, மக்களுக்கு விழிப்புணர்வையும் உண்டு செய்கிறார்கள். அவற்றின் பணியைப் புகழும் அளவுக்கு அவை செய்தாலும் நாம் விலங்குகளின் இருப்பு, செயல்பாடுகள் பற்றி அறிவதில்லை. இவை அந்த விலங்குகளின் நலனுக்கு வழிவகுப்பதை விட வேதனைக்கே வழிவகுக்கும். அவை செயற்கையாக இந்தக் கூண்டுகளில் நடமாடுகின்றன, அவை வாழவில்லை.
. இந்தக்கதை கட்டுரையைப் படித்ததும் எண்ணற்ற வினாக்கள் எழுந்திருக்கும்.
பின்னர் எப்படி இந்த விலங்குகளைக் காண்பது? சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் வாழ்தல் சுதந்திரத்தை விட முக்கியம். விலங்குகள் இயற்கையான இருப்பிடத்தில் வாழ விடப்பட்டால் நான் ஏன் எதிர்க்கிறேன். அழிவை சந்திக்கும் மிருகங்களை எப்படிக் காப்பது? விலங்கியல் பூங்காக்கள் இல்லை என்றால் எப்படி மக்கள் விலங்குகள் பற்றி அறிவார்கள்?
மனிதர்கள் ஒரு விலங்கைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக அவற்றின் வாழ்விடத்தை மாற்றுவது, அவை உணவு தேடும் முறையை அடைப்பது, தங்களுக்கான இணையைத் தேடுவதைத் தடை செய்வது எல்லாம் சரியா? ஜோடிகளைப் பிரித்து அவற்றை மனிதர்கள் வாழும் இடங்களில் இருந்து மிகக்குறைந்த தூரத்தில் கூண்டுகளில் அடைத்து வாழவைப்பது குற்றமில்லையா?
அவற்றின் நலன்களை அழித்து இப்படி விலங்குகளை ரசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனந்தமாக வாழ்வததைத் தீவிரமாக ஆதரிக்கும் அதே சமயம் வலிமிகுந்த ஒரு வாழ்க்கையை விலங்குகளுக்குப் பரிசளிப்பது நியாயமில்லை.
இது எனக்கு இயற்கையான சுற்றுச்சூழல் இல்லை. ஒரு மயிலை பத்துக்குப் பத்துக்குக் கூண்டில் அடைத்து காய்ந்த மரக்கட்டையை மரம் என்றும், சில தானியங்கள் அதற்கு உணவு என்றும் அமைத்துவிட்டு இது இயற்கையான சுற்றுச்சூழலில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சூழியல் என்பது தவறு.
செயற்கையாக வேளாவேளைக்கு அவற்றுக்கு உணவு தருவதை நம்மைப் போல அவற்றை உணவு அருந்த வைத்து விடும். தங்களுக்கு விருப்பமான உணவை வேட்டையாடி பெறும் திறனை அவை இழந்து விடுவதோடு தங்களின் உடல் தேவைக்கு ஏற்ப உணவைத் தேடிக்கொள்ளும் ஆற்றலையும் அவை இழக்கின்றன. இயற்கையின் சூழலில் தங்களுக்குக் கிடைக்கும் உணவு, கிடைக்காத இரை ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ளும் திறனையும் அவை இந்தச் சூழலில் இழக்கின்றன. இவை நோய் எதிர்ப்பை குறைத்து அவை ஊட்டச்சத்து குறைவுக்கு உள்ளாவதையும், நோய் பரவலுக்கு ஆட்படுவதற்கும் வழிகோலுகிறது.
விலங்கியல் பூங்கா என்பது பல்வேறு மிருகங்களின் தொகுப்பு வைக்கப்பட்டிருக்கும் இடமாகும். இன்னம் விரிவாக இந்த வரையறையை விளக்குவது என்றால் உலகம் முழுக்கக் காணப்படும் வெவ்வேறு விலங்குகளைச் சேகரித்து அவற்றை ஒரு குறிப்பிட்ட கட்டுப்படுதப்பட்ட்ட இடத்தில் வைக்கிறோம். இந்த இடத்துக்குள் அவை வாழ வேண்டும், கூட வேண்டும், அடை காக்கவும், வம்ச விருத்தியும் செய்ய வேண்டும். அவையும் அவற்றின் குட்டிகளும் எப்பொழுதும் வனவாழ்க்கைக்குப் போகப்போவதில்லை. அந்தக் குட்டிகள் என்ன பாவம் செய்தன? பறப்பதை பாவம் என்று ஏன் விலங்கியல் பூங்காவின் கூண்டில் பிறந்த பறவை நினைக்க வேண்டும்? ஒழுங்கான பயிற்சியை அவற்றின் பெற்றோர்கள் தராததால் அவற்றால் காட்டில் ஜீவிக்க முடியாது. இந்தக் குட்டிகளைக் காக்க சிறந்த வழி என்னவென்றால் அவற்றின் பெற்றோர்களை இயற்கையான சூழலில் வாழவிடுவது தான்.
இந்தப் பூமியில் சில மனிதர்களின் அட்டூழியங்கள், பலரின் கவனமின்மை, அறியாமை ஆகியவற்றால் இந்த உயிரினங்கள் வாழ போராடிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை உயிரியல் பூங்காவுக்கு அழைத்து வந்து ஏன் இன்னமும் கொடுமைப்படுத்த வேண்டும், உயிரியல் பூங்காக்கள் அவற்றைக் காப்பதில் மிகப்பெரிய பங்காற்றி இருந்தாலும் அவற்றை அந்த உயிரினங்களின் இயற்கையான வாழ்விடத்தில் பாதுகாக்க வேண்டும். வனத்துறை, சுற்றுச்சூழல் அமைப்புகள், பாதுகாப்பு அதிகாரிகள், உயிரியல் பூங்கா நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாப்பு பணிகளுக்காகப் பாராட்டுவோம். அதே சமயம் எல்லா விலங்குகளையும் ஒரே உயிரியல் பூங்காவில் அடைப்பதன் மூலம் அவற்றைச் சூழியல் ரீதியாக, சமூக, உளவியல், உடலியல், கலாசார ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். நியாயமாக அவற்றின் அவை இயற்கையாக வாழுமிடத்தில் வைத்து காப்பதே அவரின் நலனுக்கு உகந்தது எனக்கருதுகிறேன். அவை விலங்கியல் பூங்காக்களில் மகிழ்ச்சியாக வாழவோ, நிம்மதியாக இறக்கவோ முடியாது.
இந்த விலங்கியல் பூங்காக்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இது எப்படிப் பாதுகாப்பது ஆகும். நீங்கள் விரும்பும் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஆர்க்டிக் பகுதியில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு உங்களை ஒரு பனிக்கரடி தினமும் பொழுதுபோக்குக்காக வந்து பார்த்துவிட்டுப் போவது எப்படிப்பட்ட உணர்வைத் தரும். அதை நான் மனித பாதுகாப்பு என அழைக்கட்டுமா?
கார்த்திகேயன் ராமலிங்கம், முன்னால் வன சரக அதிகாரி- தமிழ்நாடு வன துறை, வனவியல் பட்டதாரி, முதுகலை பட்டதாரி டிப்ளோமா - சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை - WWF இந்தியா, தற்பொழுது சுற்றுசூழல் ஆசிரியர் ஆக பணிபுரிகிறார்.
No comments: