health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

வியக்க வைக்கும் தமிழரின் அறிவியல் வரலாறு - ஒரு சிறு முன்னோட்டம்

"முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்குமாய்ப் பெற்றி பெற்று இலங்கும் வாய்ப்பு தமிழுக்கு அன்றிப் பிறமொழிகளுக்கு வாய்க்கவில்லை; உலகின் இனங்களுக்குத் தனித்தனித் தாய்மொழி உண்டு. ஆனால் உலக மொழிகளின் தாய் என்ற பெருமை தமிழுக்கே உண்டு'' என அமெரிக்கப் பெர்க்கிளி பல்கலைக் கழகத்தின் மொழிப்புலத்துறைத் தலைவர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிடுகின்றார்.

"கருவளர் வானத் திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
(பரிபாடல் 2:5-12)

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சங்க காலத் தமிழிலக்கிய நூலான பரிபாடலில் இடம்பெற்ற வரிகள் இவை. பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
உலகம் எப்படி தோன்றியது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன இந்த வரிகள். 
நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது. 
இந்த உண்மைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
உலகம் உருண்டை; அது அண்டவெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், அறிவர் கலீலியோவால் கண்டறிந்து அறிவிக்கப்பட்டதாகும். உருண்டையானது என்பது உலகம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு அர்த்தம். உலகைக் குறிக்கும் மற்றொரு சொல்லான ஞாலம் (ஞாலுதல்- நாலுதல்- நான்றுகொள்ளுதல்) தொங்கிக்கொண்டிருப்பது என்ற பொருளுடையது. இச்சொற்களுக்கான வயது கி.பி. 8-க்கு முந்தியது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் உழவின் பெருமை பற்றி திருக்குறளில்-""சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை'' என்று பாடும் திருவள்ளுவர் உலகம் சுழல்கிறது என்ற அறிவியல் கருத்தை போகிறபோக்கில் சுட்டிக்காட்டுகிறார்.
20-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு சிவந்ததாகக் காணப்படுகிறது என்ற தகவல், விஞ்ஞானிகளால் ஏவுகணை, செயற்கைக்கோள் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உறுதி செய்யப்படு கிறது. காலங்கணிக்க முடியாக் காலத்தே சிவந்தது என்ற பொருள்படும்படியாகச் "செவ்வாய்' என்ற பெயர் தமிழில் அமைந்திருப்பது வியப்பிற்கு உரியதாகும்.
மேலும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை

“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை" 

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது.
இப்படி தமிழர்களின் அறிவியல் வரலாற்றை எடுத்துரைக்க பல எடுத்துகாட்டுக்கள் கூறலாம். விஞ்ஞானத் துறை இன்றைக்குப் பலவாகப் பிரிந்து வளர்ந்தவண்ணம் இருக்கிறது. வானியல், மண்ணியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், பயிரியல், நிலவியல், மருந்தியல், உயிர்வேதியல், மருத்துவஇயல், கணிப்பொறியியல், மின்னியல், பொறியியல் என அறிவியல் துறைகள் வளர்கின்றன. 
இதனை முன்கூட்டியே உணர்ந்ததுபோல முத்தமிழில் முதல் தமிழை இயல் தமிழ் என்று வைத்துள்ளது எத்துணை ஆழமானது. இயல் என்பது ஒன்றன் இயல்பை, இயற்கையை அறிவதாகும். விஞ்ஞானத்தின் வித்தே அதுதான். இந்தப் பின்னணியில் "இயல்தமிழ்' இனிவரும் காலத்தே பலவகை அறிவியல் தமிழாக அரும்பவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

இந்த கட்டுரை நான் தொகுத்த ஒன்றே, பல அறிஞர்கள் எழுதிய படிப்புகளில் இருந்து தொகுக்கப்பட்டது.

சிவ சங்கர் பாண்டியன்

உசாத்துணை:
  1. Learn Sangam Tamil - learnsangamtamil.com - Vaidehi Herbert, Hawaii, U.S. A.
  2. மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்
  3. வியக்க வைக்கும் பழம்பாடல்கள் - tamiltraditional.cf
  4. அப்துல் காதர் கட்டுரை - www.nakkheeran.in 

No comments: