health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

பொய் வழக்குகளையெல்லாம் சந்தித்து தான் மரங்களைக் காப்பற்ற வேண்டியிருக்கிறது - தென்னிந்தியாவின் மர மனிதர் யோகநாதன்

கோடை இப்போது தான் தொடங்கியிருக்கிறது.கோடைக் காலத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கெல்லாம் இன்னும் பல நாட்கள் இருக்கின்ற போதே வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியவில்லை.ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் ரோட்டில் இறங்கி சண்டை போடத் தொடங்கிவிட்டனர்.இதற்கெல்லாம் முக்கியமான காரணமாய் கருதப்படுவது இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது.மரங்களையெல்லாம் வெட்டி காடுகளை அழித்து,அதிலிருக்கும் விலங்குகளின் வாழ்க்கையையும், அதைச் சார்ந்திருக்கும் நம் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
அவற்றையெல்லாம் எதிர்த்துக் கடந்த முப்பது வருடங்களாகப் போராடி வருகிறார் கோவையைச் சேர்ந்த யோகநாதன்.
பேருந்து நடத்துனரான இவர் இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
மேலும் 3800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே இயற்கை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.இயற்கையைப் பாதுகாக்க பலவகை செயல்களையும் போராட்டங்களையும் செய்து வருகிறார் யோகநாதன்.மரங்களினூடே பயணித்துக்கொண்டிருந்த யோகநாதனுடன் ஒரு சின்ன நேர்காணல்.

இந்தப் பயணம் எப்படி ஆரம்பித்து? உங்களுடைய தொடக்கப்புள்ளி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

      நான் பன்னிரண்டாம் வகுப்புவரை தான் படித்திருக்கிறேன்.இப்போது விஞ்ஞானிகளுடனும் அறிஞர்களுடனும் கலந்துரையாடுகிறேன் என்றால் அதற்கு அனுபவ அறிவே காரணம்.பள்ளியில் படிக்கும் போதே மரம் நடுவது, விவாதங்கள் செய்வது, இலக்கிய வட்டம் அமைத்துப் பேசுவது என்று சிறுசிறு விஷயங்களைச் செய்து வந்தோம்.அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய அளவில் வந்து நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.இப்போது தமிழக பசுமை இயக்கத்தின் மாநிலச் செயலாளரான ஜெயச்சந்திரன் அவர்கள் தான் முதன்முதலில் இந்தக் களத்தில் இழுத்துவிட்டார்.அதன் பிறகுதான் சுற்றுச்சூழலின் அறிவியல் பற்றி அறியத் துவங்கினேன்.என் முதல் போராட்டம் நீலகிரியில் தேயிலை வறுப்பதற்காக மரங்களை வெட்டப்படுவதைத் தடுக்கும் போராட்டம்.நீலகிரியிலிருக்கும் மரங்களை வெட்டக் கூடாது என்று போடப்பட்ட கோதவர்மன் வழக்கிற்கும் எங்கள் போராட்டம் உறுதுணையாய் இருந்தது.நீலகிரியில் மரங்களை வெட்டக் கூடாது எனத் தீர்ப்பும் வந்தது.அதுவே என்னுடைய முதல் வெற்றி.

எங்கே,எப்படி,என்ன மரங்களை நடுவீர்கள்?

       ஒவ்வொரு ஊர்களின் மண்ணுக்கு ஏற்ப நம் நாட்டு மரங்களைத் தான் தேர்ந்தெடுத்து நடுகிறேன்.ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயற்கைக்காக நான் ஒதுக்கிய நாள்.ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு பள்ளிக்குச் சென்று முதலில் இயற்கையைப் பற்றி வகுப்புகள் எடுப்பேன்.அதன் பிறகு மரக்கன்றுகளைக் கொடுத்து நடவைப்பேன்.முழுக்க முழுக்க பாதுகாப்பான இடங்களில் தான் மரங்களை நடுவேன்.கேட்பாறற்றுக் கிடக்கும் இடத்தில் மரக்கன்றுகள் நடுவதில் எந்தப்பயனும் இல்லை.தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டுவருகிறேன்.

உங்களுடைய வாசகமே "உயிர் வாழ ஒரு மரம்" என்று வைத்திருக்கிறீர்கள்.அதற்குக் குறிப்பிட்ட காரணம் ஏதேனும் இருக்கிறதா?

        ஒரு மரம் மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளையெல்லாம் உள்வாங்கியுள்ளன.மனிதன் சுவாசிக்கத் தேவையான காற்று,உயிர்வாழத் தேவையான மழை,மருத்துவ குணங்கள் நிறைந்த கனிகள்,பூக்கள்,இலைகள் என எண்ணற்ற பலன்களைக் கொடுக்கிறது.மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு காற்றையும் நீரையும் தேடி அழையும் போதுதான் அதன் அருமை புரியும்.எனவே நாம் நிம்மதியாக உயிர் வாழ வேண்டுமென்றால் ஒரு மரத்தையேனும் ஒவ்வொருவரும் நடவேண்டும்.அதற்காகவே "உயிர் வாழ ஒரு மரம்" என்ற வாசகத்தை என் நோக்கமாய் வைத்திருக்கிறேன்.

நடுத்தர வர்க்கத்திலிருக்கும் ஒருவராய் உங்களின் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

          வணிகரீதியாக மிகப் பெரிய இழப்பு.என் வேலையுண்டு நானுண்டு என்று இருந்திருந்தால் சொந்த வீடு வாங்கியிருக்கலாம்.வீட்டின் தேவையைப் பூர்த்தி செய்திருக்கலாம்.ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பது ஒரு வகையில் வலியாக இருந்தாலும் ஒரு வகையில் நல்ல விஷயத்திற்காகத் தான் செலவு செய்திருக்கிறோம் என்று மகிழ்ச்சியாகவும் மனதிற்குத் திருப்தியாகவும் இருக்கிறது.இங்கு மரம் நடுபவர்களுக்கு யாரும் பணம் தருவதில்லை,மரம் வெட்டுபவர்களுக்கே பணம் தரத் தயாராய் இருக்கிறார்கள்.அரசாங்கம் எவ்வித உதவியும் இது வரை கொடுக்கவில்லை.அனைத்து செலவுகளையும் என் சொந்த வருமானத்தில் தான் பார்த்துக் கொள்கிறேன்.


உங்கள் குடும்பம் எந்த அளவிற்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்?

        என் பெண்கள் இருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாய் இருக்கின்றனர்.என் மனைவியும் அவ்வப்போது கோபித்துக் கொண்டாலும் நான் சேவை செய்வதில் என்னைவிட அவர்தான் அதிக ஆர்வமாக இருப்பார்.என்னைப் பலவகையில் கடிந்து கொண்ட சுற்றமும் நான் இப்போது வாங்கிக் கொண்டிருக்கும் விருதுகளையும் பாராட்டுகளையும் பார்க்கும் போது புகழ்கின்றனர்.குடும்பத்தின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் செயல்பட முடியாது.

இப்படி போராட்டங்களும்,செயல்களும் செய்யும் போது பிரச்சனைகள் வருவதுண்டா? அதை எவ்வாறு கடந்து வருகிறீர்கள்?

        நிறைய பிரச்சனைகளையும்,பொய்க் குற்றச்சாட்டுகளையும் கடந்து வந்திருக்கிறேன்.நான் செய்யும் செயல்களால் யாருக்கெல்லாம் இடையூறு வருகிறதோ,அவர்கள் எல்லாம் என்மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்தனர்.சில சமயங்களில் அடிதடி வரைக்கூட சென்றுள்ளது.எனக்கென்று நிறைய வழக்கறிஞர்கள் உதவ முற்படுகிறார்கள்.நண்பர்களின் உதவிகளால் அவ்வித பிரச்சனைகளிலிருந்தெல்லாம் மீண்டு வந்துள்ளேன்.நிறைய போட்டிகள் பொறாமைகளால் என் மேலதிகாரிகளே என் மீது கோபம் கொண்டுள்ளனர்.உண்மையை மட்டுமே பேசுவதாலும்,நல்ல செயல்களை மட்டுமே செய்வதாலும் எளிதில் அவற்றிலிருந்தெல்லாம் வெளியே வந்துவிட முடிகிறது.

குழந்தைகளையும்,இளைஞர்களையும் சந்திக்கும் போது அவர்களிடம் எம்மாதிரியான விஷயங்களைக் கற்றுத் தருகிறீர்கள்?

      பெரியவர்களை விட குழந்தைகள் தான் எளிதில் எதைச் சொன்னாலும் புரிந்து கொண்டு அதைச் செயல்படுத்துகின்றனர்.பொதுவாக அவர்களிடம் இருப்பது மூன்று பிரச்சனைகள்.ஒன்று மரக்கன்று இல்லையென்பது,அதனையும் நானே வாங்கிக் கொடுத்துவிடுவேன்.அடுத்து மரம் நடுவதற்கான இடம்,அதையும் நானே தேர்வு செய்து கொடுத்துவிடுவேன்.மற்றொன்று தண்ணீர் ஊற்றுவதற்கான எளிய வழிகள்.உபயோகித்த தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் நிரப்பினால் அதுவே போதும் இப்படி சில  வழிகளைக் கற்றுத் தருகிறேன்.இதனால் அவர்கள் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் மரங்களை வளர்க்கத் தொடங்குகின்றனர்.பட்டாசு வெடிக்காத குழந்தைகள்,பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தாத பள்ளிக்கூடங்கள்,காகிதங்களை அதிகம் வீணாக்காத மாணவர்கள்.இவைகள் தான் என் உழைப்பின் பலன்கள்.மாணவர்களோடு இருப்பதே எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.நான் சோர்வாகாமல் பயணிப்பதற்கு அவர்களே காரணம்.

தமிழ்நாட்டினுடைய சுற்றுச்சூழல் இன்றையளவில் எந்த நிலையில் இருக்கிறது?

        தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மிகமிக மோசமான நிலையில் தான் இருக்கிறது.நாங்கு வழி சாலைகளுக்காக பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுவிட்டன.விலங்குகளுக்குப் பாதுகாப்பில்லை,மனிதனுக்கும் சேர்த்துதான்.காடு,வனம் எல்லாம் அழித்தாகிவிட்டது.எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என்று வருடம் ஒரு முறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.அப்போதுதான் திருட்டுத் தனமாக மரம் வெட்டப்படுவதைத் தடுக்க முடியும்.

உங்களுடைய நீண்ட நாள் ஆசை ஏதேனும் இருக்கிறதா?

     அனைவரும் ஒரு மரம் நட்டு வளர்த்தாலே எனக்குப் போதும்.பிறகு தண்ணீர்,காற்று,மயில்,யானை,மழை,குருவி என்று அனைத்து இயற்கை சார்ந்த விஷயங்களை எல்லாம் உள்ளடக்கிய சிறுசிறு புத்தகங்களை எழுத வேண்டும்.குழந்தைகளுக்கு அது வாய்ப்பாடு புத்தகத்தைப் போல பயன் தர வேண்டும்.இதற்கு முன்பாகவும் 'மூச்சுக் காற்று' என்றொரு கவிதை நூல் எழுதியுள்ளேன்.பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 'பசுமை நிழல்' என்று ஒரு புத்தகமாக வெளியிடவும் தீட்டமிட்டுள்ளேன்.தாகம்,கா,ரேடியோ போன்ற குறும்படங்களும் எடுத்துள்ளேன்.இறுதியாக ஒரு ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி அனைவருக்கும் இலவசமாய் அங்க மரக்கன்றுகள் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு.

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?

        நாளைய சமுதாயம் உங்கள் கையில் தான்.அதைத் தீர்மானிக்கப் போவதும் நீங்கள் தான்.மனமிருந்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.மரம் நடுவதற்கு இடமில்லை என்று புலம்புவதைவிட்டு விட்டு,பள்ளிகள்,மருத்துவமனை போன்ற பராமரிப்பு இருக்கும் பொது இடங்களில் மரங்களை நடலாம்.இதுபோன்ற விரிவான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாட்டுக்காகவும் பிறந்த மண்ணிற்காகவும் ஏதாவது செய்யுங்கள்.நீடித்து நிலைத்து நிற்கும் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள்.

தி லேன்டர்ன் குழு

No comments: