எதார்த்தமாக நடந்து வந்த அம்மா தீடீரென தன் கையைப் பிடித்து இழுத்ததில் விருக்கென்று துள்ளிவிட்டாள் மதி.ஆஸ்பத்திரியில் அத்தனை பேருக்கு நடுவில் அம்மா அப்படிச் செய்தது விசித்திரமாக இருந்தது அவளுக்கு.
"மா..என்னாச்சு?ஏன் இப்படி கூட்டிட்டு போற?"என்றவளுக்கு "உஷ்" என்ற சத்தமே பதிலாய்க் கிடைத்தது.
மகப்பேறு மருத்துவமனை என்பதால் வரிசை வரிசையாக பெரிய வயிறுடனும் கை நிறைய வளையல்களுடனும் பெண்கள் தங்கள் கணவன்களோடு காத்திருந்தனர்.
ஆஸ்பத்திரியின் அந்த வராண்டாவைக் கடந்து அடுத்த பகுதிக்கு வந்ததும் மதியின் கையை விட்டுவிட்டு பெருமூச்சு விட்டாள் அம்மா.ஒன்றும் புரியாதவளாய் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நம்ம ஆத்தா ஊருல பெரிய தோட்டத்து கணேசன் மாமா தெரியும்ல.அவுங்க வீட்டுக்காரம்மா சுந்தரி வந்திருக்கு.அனேகமா அந்த சுந்தரி அத்தை பொண்ணுக்கு இரண்டாவது குழந்தை பொறந்திருக்கும்னு நெனைக்குறேன்".
"அதுக்கு ஏன்மா இப்படி வந்த?போய் பேசிட்டு குழந்தையப் பார்த்துட்டு நூறோ இரநூறோ வைச்சுட்டு வந்துருக்லாம்ல?சரியான லூசு மா நீ"
"நாம எதுக்கு இங்க வந்துருக்கோம்னு கேட்டா என்ன பாப்பா சொல்லுவ?வா,போலாம்"
"ஆமால" என்று தலையசைத்தாலும் டெட்டால் வாசத்தில் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள் மதி.
................................
ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டு வாசலில் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்த மதியை மேலும் கீழும் பார்த்த பக்கத்து வீட்டு ஜெயா அத்தை,"என்ன மதி ஸ்கூலுக்கு போலயா?"
"இல்லீங் த்தை,போல"என்று தரைபார்த்து நின்றவளைக் கண்டு எல்லாம் புரிந்த தொனியில்,"தூரமாகிட்டியா?".அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவளாய் நின்றிருந்தாள் மதி.
உள்ளிருந்து வந்த மதியின் அம்மா"ஆமா ஜெயா,இது தான இவ பெரிய பொண்ணாகி முதல் தடவையா தூரமாகுறா.அதான் வீட்ல இருக்கட்டும்னு லீவ் போட சொல்லிட்டேன்"என்று மதியின் பதிலுக்கு உதவி செய்தாள்.
"இவ பெரிய பொண்ணாகி இருபது நாள் தான இருக்கும் அதுக்குள்ள எப்படி?"
"ஒவ்வொருத்தங்க உடல் வாகு அப்படி இருக்கலாம்ல.அடுத்த முறை சரியாகிடும்.சின்ன புள்ளதான".
என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரியாமலேயே முழித்துப் பார்த்துக் கொண்டே தன் நீளக் கூந்தலைக் கோதிக் கொண்டிருந்தாள் மதி.
.....................
"அம்மா,போன் சார்ஜ் புல்லா போய்டும் போலிருக்கு.இந்த டாக்டர் நம்மள பார்ப்பாங்களா?இல்லையா?"
"இருடி.பர்ஸ்ட் மாசமா இருக்கவங்கள தான் பாப்பாங்க.அடுத்து தான் நமக்கெல்லாம் பார்ப்பாங்க.காலேஜ்லயும் போன் தான் நோண்டுற,,வீட்டுக்கு வந்தாலும் அதே தான் பண்ற.ஒரு நாளைக்கு சும்மா வேடிக்கை பாரு."
சுத்தியும் கணவன்களும் அம்மாக்களும் அந்தப் பெண்களைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள்.இதுமாதிரி பிரச்சனைகள் இருந்தால் குழந்தை பிறக்காது என்று எங்கேயோ படித்த நியாபகம் வந்தது மதிக்கு.இப்படி சிந்தித்தால் வீணாக மன உலைச்சல் தான் என்று கவனத்தைத் திசை திருப்ப முயன்றாள்.
"இதுக்கு தான் இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்லாம் வேண்டாம்னு சொன்னேன்".
"நம்மளும் அஞ்சாறு வருஷமா சின்ன ஹாஸ்பிடல்ல எல்லாம் பார்த்தாச்சு.இங்க எல்லா ஸ்கேன்,டெஸ்ட் எல்லாமே எடுத்துப் பார்க்கச் சொல்லலாம்".
அம்மா சொல்லும் பதில்களை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் வாட்ஸ் ஆப் குரூபில் அப்பாவி டோலியைக் கலாய்த்துக் கொண்டிருந்தாள் மதி.
....................
"மா,இந்த சிந்து லவ்வர பைரவி கல்யாணம் பண்ணுனா,அவன் அண்ணன் சிந்துவ லவ் பண்றான்.சே,மானங்கெட்ட பொழப்பு மா.மூனு வருஷமா ஓட்டுறாய்ங்க இதையே"
"யேன் பாப்பா,ஒரு முறை மாசாணியாத்தா கோவிலுக்கு போய்ட்டு வந்துருவோமே"
டி.வியிலிருந்து வெளியே வராமலயே,"அதெல்லாம் லீவ் இல்ல மா"என்றாள் அலட்சியமாக.
"பிளஸ் ஒன் தான படிக்குற லீவ் போட்டுட்டு போலாம்"
"அவ்ளோ தூரம்லாம் வர முடியாது.போ மா வேலையில்லைனா"
"சரி,புதன் கிழமை புதன் கிழமை மாகாளியாத்தா கோவிலுக்கு போய் விளக்கு மட்டுமாது போடலாம்"
"யேம்மா இப்படி பொழம்பி சாவடிக்கிற.நீ வேண போ,எது வேண செய்.கோவிலுக்குப் போகவே பிடிக்காத எங்கிட்ட இதையெல்லாம் சொல்லித் திட்டு வாங்காத"
"நான் என்ன எனக்காகவா கேட்டேன்.எல்லாம் உனக்கு சரியாகனும்னு தான"கண்ணீர் விட்டவளைப் பார்த்து 'ஈ' என்று சிரித்துவிட்டு மீண்டும் சிந்து பைரவியில் மூழ்கினாள்.கோவிலுக்குப் போவதால் மட்டும் எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.இருப்பினும் அம்மாவைப் பார்ப்பதற்கும் சங்கடமாய் இருந்ததால் கோவிலுக்குப் போகவும் ஒத்துக்கொண்டாள் மதி.
......................
காலை பத்து மணிக்கு ஆரம்பித்த காத்திருப்பு மாலை ஏழுக்கு தான் முடிந்தது.வரான்டா முழுக்க காலியானதும் அந்த நர்ஸ் சேச்சி,"மதிவதனி" என்று அழைத்ததும் உற்சாகத்தோடு எழுந்து உள்ளே போனார்கள்.
"டாக்டர்,ஆக்சுவலி இர்ரெகுலர் பீரியட்ஸா இருக்கு"
"ஓ...தட்ஸ் வெரி காமன் அமாங் யுவர் ஏஜ்.என்ன தொந்தரவு எப்ப இருந்து இப்படி"
ஜெயா அக்காவில் தொடங்கி நேற்று ஹாஸ்பிடல் வர ஐடியா கொடுத்த மாதவி வரை பொங்கித் தள்ளினாள்.பெரியம்மாவுக்குத் தெரியாமல் மாத்திரைகளை மறைத்து வைத்தது,ஆல்லோபதியில் துவங்கி ஆயுர்வேதம் வரை சென்று வந்தது என்று அனைத்தையும் ஒப்பித்தாள்.அடிக்கடி இந்த ஒப்பித்தல் நடக்கும் என்பதால் வரிசை மாறாமல் அனைத்து வார்த்தைகளும் சடசடவென்று வந்து விழுந்தது.
"இது பொதுவா உங்க ஏஜ் பொண்ணுங்களுக்கு இருக்கும்.கரு முட்டைகள் வளர்ச்சிக்கு எதிரா இருக்க ஹார்மோன் கோளாறுகள் தான்.பெருசா பயப்பட இதுல எதுவுமே இல்ல.ஒரு பத்து கிலோ வெயிட் கொறைச்சுரு,ரைஸ் சாப்டாத.யூ வில் பி ஆல்ரைட்"
"என்னது பத்து கிலோவா..அசால்ட்டா சொல்லுதே இந்தம்மா "என்று மைன்ட் வாய்சில் திட்டிக்கொண்டு அடுத்து மாத்திரை மருந்து,ஸ்கேன்,டெஸ்ட்லாம் எழுதுராங்களா என்று எட்டிப் பார்த்தாள்.
"டாக்டர் இது பின்னாடி எதும் பிரச்சனை ஏற்படுத்துமா?" தயக்கத்துடன் கேட்டே விட்டாள் அம்மா.
"மா..நீங்கல்லாம் இன்னும் பழைய காலத்துலயே இருக்கீங்க.தலைக்குக் குளிக்குறது,தள்ளி வைக்குறதுன்னு அரைகுறை சடங்குகள ஃபாலோ பண்ணிட்டு.எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்திருக்கு.ஊர் உலகத்துல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க.காதுலயே வாங்காம உடம்ப ஹெல்தியா பாத்துக்கோங்க.போதுமான உடல் உழைப்பு இல்லாததும்,இன்ஆர்கானிக் உணவுகளும் தான் காரணம்.உடற்பயிற்சியும் உணவுப் பழக்கமும் சரி பண்ணிக்கோங்க"
"அவ்வளவு தான் மா.போய்ட்டு வாங்க..இப்ப சாப்டுற டேப்லடே கன்டினியூ பண்ணிக்கோங்க"
பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வெளியே வந்த மதிக்கும் அம்மாவுக்கும் கோபத்தை மீறி சிரிப்பு வந்துவிட்டது.இந்த இரண்டு அட்வைஸ்சுக்குத் தான் ஒரு நாள் முழுக்கக் காத்திருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கவே கடுப்பாகவும் இருந்தது.யாரும் இல்லாத வராண்டா என்பதால் அங்கேயே நின்று ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
"இப்படி ஒன்னுமே இல்லாத இந்த சின்ன விஷயத்துக்குத் தான் இவ்வளவு அழுகை, போராட்டம், அவமானம்.எனக்கு அப்படியே இருந்துட்டா கூட பரவால்ல.இந்த மாதிரி டிரீட்மெண்ட்னு வந்தாதா இன்னும் சங்கடமா இருக்கு.ஒரு பொண்ணுக்கு இது மானத்தைக் காப்பாத்துற விஷயமா போச்சுல்ல மா."
நறுக்கென்று கேட்ட அவள் கேள்விக்குச் சமூகத்தினுள் சிக்கிக் கொண்டிருப்பவளாய் பதில் சொல்லாமலேயே சுந்தரி அத்தை இருக்கும் இடத்தைக் கடக்கும் போது தன் பையால் முகத்தை மூடிய படி விரைந்து கடந்தாள் அம்மா.இது அம்மாவின் தவறல்ல இன்றும் மாற மறுக்கும் சமூகத்தின் தவறு என்று அம்மாவின் பின்னால் மறைந்து கொண்டே கடந்து போனாள் மதி.
No comments: