"தன்கையே தனக்குதவி"- என்று தங்களுக்கான கழிப்பறைகளை தாங்களே செய்து முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!!
Labels:
சமூகம்
தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது. இப்படி இருக்கையில் குழந்தைகளுக்குச் சரியான வழியைக் காட்டித் தருவது பெற்றோர்களின் கடமையாகத் திகழ்கிறது. அதனாலேயே பெற்றோர்கள்,பணத்தைப் பறித்துக் கொண்டே இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அரசாங்கப் பள்ளியில் சேர்த்தால் குழந்தைகளின் ‘படிப்பு கெட்டுப்போகும்’, ‘பெரிய நிலைமைக்கு வராது’, ‘சுயமாக சிந்திக்கத் தெரியாது’ என்றெல்லாம் நினைக்கின்றனர்.
இதோ மாறுதலாய், உலகையே தன் அற்புத யோசனையினால் திரும்பிப் பார்க்கச் செய்த ஐந்து அற்புத குழந்தைகள். பெரிய தனியார் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் அல்ல. திருச்சி மாவட்டம் மணப்பாரை அருகே உள்ள குரும்பப்பட்டி எனும் ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் திறமையான செயலுக்குக் கிடைத்த பரிசே இந்த "ஐ கேன் விருதுகள் 2016" விருதும் 5000 ரூபாய் ரொக்கப் பரிசும்.
"சிறுதுரும்பும் பல் குத்த உதவும்" என்னும் பழமொழி சார்ந்து அமைந்ததே இந்தச் சாதனை.
தான் படிக்கும் வகுப்பறையில் வந்த துர்நாற்றமே இதன் காரணமாகும். திடீரென வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைய, இதன் காரணத்தை கண்டறிய ஆசிரியர் கேசவன் முயற்சி எடுத்தார். இதன் விளைவாக ஐந்து பேர் கொண்ட மாணவர் குழுவினைத் தேர்வு செய்தார். சுபிக்பாண்டியன், சந்தோஷ், தயாநிதி, ராகுல், பிரபாகரன் இதுவே அந்த ஐவர் வெற்றிக்குழு.
பள்ளி காலையில் துவங்கியது முதல் அனைவரின் நடவடிக்கையையும் கவனித்து வந்தனர். அவர்கள் சிறுநீர் கழித்து வந்த பின்தான் இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது எனக் கண்டறிந்தனர். காரணம் அவர்கள் சிறுநீர் கழக்க போதிய வசதியில்லாமல் தரையில் சிறுநீர் கழிப்பதே. அதனால் சிறுநீர் கழிக்கும் வேளையில் அச்சிறுநீர்த் துளிகள் ஆடைகளில், கை, கால்களில் படிகின்றன. மேலும் அப்பள்ளியில் கைகழுவும் வசதியும் சரியாக அமைக்கப்படாமல் இருந்தது. இதனாலேயே குழந்தைகள் காய்ச்சல், குமட்டல், வயிற்றுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டார்கள்.
சில அரசாங்கப் பள்ளிகளில் பெண்களுக்கே கழிப்பறை இல்லாத சமயத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டறிய முடியுமென அக்குழந்தைகளுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆகையால், அப்பள்ளி ஆசிரியர்களிடம் உதவியை நாடியது இக்குழு. சிறு தொகை சேர்ந்தது. எனினும் போதவில்லை.
இதற்கிடையில் இக்குழுவில் உள்ள ஒரு மாணவருக்கு தோன்றிய யோசனையே 20 லிட்டர் தண்ணீர் கேனை சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றியமைக்கும் திட்டம். இந்த கேன் வாங்க சென்றபோது, தண்ணீர் கேன்கள் வழங்கும் உரிமையாளர் தேவைப்படாத, உடையும் நிலையில் உள்ள கேன்களை பெருந்தன்மையுடன் இலவசமாக வழங்கினார்.
அந்த கேன்களை சரியாக அறுத்தெடுத்து சுன்னாம்பு பூசி சிறுநீர் கழிக்க பயன்படுத்தினர். அவர்கள் கழித்த சிறுநீரை, சொட்டுநீர் அமைப்பின் மூலம் தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்யுமாறு மாணவர்களே அமைத்துக் கொண்டனர்.
இதற்கான பைப்புகள் மற்றும் இதர செலவுகளுக்கு ஆசிரியர் அளித்த உதவித் தொகையை பயன்படுத்திக் கொண்டனர். மாணவர்கள் தாங்களாகவே இதை கழிவறையில் பொருத்தினர். மீதமுள்ள பணத்தில் வெளியே கைகழுவும் வசதியும் செய்தனர். இது பள்ளியையே சுத்தமாக மாற்றியது.
இந்தத் திட்டம் "சுகாதாரமாக சிறுநீர் கழிக்கும் திட்டம்" என தலைப்பிடப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு வெளியிடங்களிலும் வழியுறுத்தி வருகின்றனர். இது ஸ்வச் பாரத் மிஷன் என்னும் பிரதமரின் சுகாதாரத் திட்டத்தின் முதல்படியாகக் கருதப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட 100பள்ளிகள், 27 மாநிலங்கைளயும் பின்தள்ளி "ஐ கேன் விருதுகள் 2016" ஐ வென்றது இத்திட்டம். இம்மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அவர்கள் பாராட்டியுள்ளார்.
இதை பள்ளிகளில் மட்டும் அல்லாது, வீட்டிலும், கடைவீதிகளிலும் மற்ற பொது இடங்களிலும் செய்து நம் சுகாதாரத்தை நாமே மேம்படுத்தலாம்.
2016 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் வந்த செய்தி இது;
“தமிழகத்தில் 15 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. குறிப்பாக 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமி ழகத்தில் 2,080 பள்ளிகளில் கழிப் பறை இருந்தும் பயன்படுத்த தகுதி யற்றதாக உள்ளன.”
எப்படி கேசவன் என்னும் ஆசிரியரின் தூண்டுதலால் இப்படி ஒரு வெற்றிச்சாதனை நிகழ்ந்ததோ, அதேபோன்று ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கான கடமையை தானே உணர்ந்துகொண்டு முன்வந்து தம் பள்ளிக்கும் அதில் படிக்கும் தன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடவேண்டும்.அரசாங்கத்தின் உதவியை எதிரிப்பார்த்து காத்திராமல் ஆசிரியர்களே மாணவர்களை இம்மாதிரியான செயல்களைச் செய்ய வைத்தால் அது மாணவர்களுக்கு மிகுந்த பயனைத் தரும்.
சிறிய தண்ணீர் கேனிலிருந்து ஒரு சிந்தனை நொடிப்பொழுதில் வருமானால் கலாம் கண்ட கனவு நினைவாகும் காலம், கை எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஐவர் இணைந்தால் ஊர் சுத்தமாகும் என்றால், மாணவர்களே எழுந்திருங்கள் காத்திருக்கிறது இந்தியா உங்களுக்காக!!
கு.கீர்த்தனா
Keerthana is a Contributing Writer to The Lantern. She is pursuing her Bioinformatics Degree at the Tamil Nadu Agricultural University, Coimbatore.
No comments: