health

[சுற்றுசூழல்][bleft]

Technology

recentposts

business posts

[Politics][bleft]

புத்தகம் வாசிப்பின் மகத்துவம் அறிவோம்

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும், மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆறு அறிவுடன் இயங்குவதுதான். இதில், ஆறாம் அறிவான பகுத்தறிவிற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது. காரணம், அதுவே மனிதனை இவ்வளவு தூரம் பரிணாம வளர்ச்சியடைய வைத்திருக்கின்றது. ஒரு விசயத்தையோ அல்லது சூழ்நிலையையோ தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி பகுத்துப் பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவதே மனிதனுக்கு உண்டான சிறப்பு ஆகும். தான் கேட்ட, பார்த்த, வாசித்த, உணர்ந்த விசயங்களின் மூலம் பெற்ற அறிவைப் பயன்படுத்தியே மனிதன் தன்னுடைய செயல்களுக்கான யோசனையைப் பெறுகின்றான். 
இங்கே நாம் கேட்ட, பார்த்த, உணர்ந்த விசயங்களைக் காட்டிலும் நாம் வாசித்துத் தெரிந்துகொண்ட விசயங்களே அதிகம். 
காரணம் நாம் அதிக விசயங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கமுடியாது அதற்கு நேரமும் போதாது, முழுமையான விசயத்தையும் ஒருவரால் சரியாகக் கூறமுடியாது. 
Image: PTI
அதேபோல் உலகில் நடைபெரும் அனைத்தையும் நாம் பார்க்கமுடியாது, அதற்குள் நம் வாழ்நாள் முடிந்துவிடும். மேலும் அனைத்து விசயங்களையும் நாம் உணரவும் முடியாது. ஆனால் வாசிப்பு அப்படி அல்ல அதன் மூலம் அனைத்து விசயங்களையும் முழுமையாக உடனே அறிந்துகொள்ள முடியும். நாம், நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். ஏனென்றால், வாசிப்பு ஒரு அறிவை வழங்கும் அமுதசுரபி அதன் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை அறிவார்ந்தவனாகக் கட்டமைக்கின்றது. வாசிப்பே ஒருவரின் சிந்தனைத் திறனை அதிகரிக்கச் செய்கின்றது. காலையில் எழுந்தவுடன் நமக்கு வந்திருக்கும் காலைவணக்கத்தை வாட்ஸ்-அப்பில் படிப்பதில் தொடங்குகிறது நமது வாசிப்பு.

ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும்?

புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்றால் அது மிகையாகாது. காரணம், மனித நண்பன் நேரத்திற்கு ஏற்றார்போல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்வான். ஆனால், ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய கருத்தில் மாறுவதில்லை. ஒரு கல்லை உளி செதுக்கிச் செதுக்கி அழகிய சிற்பமாக மாற்றுவதைப் போல். புத்தகம், வாசிக்க வாசிக்க நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக மாற்றுகின்றது. நமக்குத் தேவையான விசயஞானம் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நாம் வாழ்நாளில் தேவையான போது பயன்படுத்திக்கொள்ள முடியும். 
உலகில் நாம் பார்த்த பார்க்கின்ற தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக்கொண்டவர்களே. அதன் மூலம் பெற்ற அறிவைக் கொண்டே சிந்தித்தும், செயல்பட்டும், நம்மிடையே பிரபலமானார்கள்.  
பாடப்புத்தகங்களைத் தாண்டி

வாசிப்பது என்பது பாடப்புத்தகங்களுடன் நின்றுவிடாமல் அதைத்தாண்டியதாக இருக்கவேண்டும். பொதுவாக, பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் தங்களுடைய பாடப்புத்தகங்களைப் படிப்பதையே வாசிப்பு என்று தவறாக எண்ணுகின்றனர். அதுவே போதும் என்ற எண்ணத்தோடு நின்றுவிடுகின்றனர். ஆனால் அது அல்ல வாசிப்பு. பாடப்புத்தகங்களைத் தாண்டி இவ்வுலகில் பொதுவான அறிவை வழங்கக்கூடிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன அவற்றைப் படிக்கவேண்டும். உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறுபட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும். அனைவரும் தங்கள் குழந்தைகளிடம் வாசிப்பின் அத்தியாவசியத்தை உணர்த்தி அப்பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டிலேயே தங்கள் வசதிக்கு ஏற்ப சிறு நூலகம் அமைக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் இன்று பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.  எனவே, இன்று பாடப்புத்தகம் தாண்டிய பொதுஅறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

தத்துவ அறிஞர்கள்

அறிஞர் பெருமக்கள் கூறுவது ஒன்றே! அது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே. உலகிற்கான வாழ்வியல் தத்துவங்களை வழங்கிய தத்துவ ஞானிகள் அனைவரும் ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அவற்றை உருவாக்கினார்கள். சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ், டார்வின், புத்தர், போன்றோரை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்களின் அறிவுக்கூர்மையே. இவர்களின் தத்துவங்களே இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தத்துவங்களை நாம் தெரிந்துகொள்ள இவர்களை வாசிக்கவேண்டும். 
காலையில் நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக உள்ளே சென்று நூலக நேரம் முடிந்ததுகூட தெரியாமல் தன்னுடைய வாசிப்பில் மெய்மரந்த அம்பேத்கரால் தான் உலகிலேயே சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்கமுடிந்தது.
 நமது நாட்டை ஆட்சி செய்த பல அரசியல் தலைவர்களும் இலக்கிய ஞானம் பெற்றவர்களே. காரணம் அவர்களிடம் இருந்த வாசிப்பு பழக்கமே. இந்த சமூகத்தில் நமக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் உருவாக்கிக்கொள்ள வாசிப்புதான் உதவும்.

வாசிப்பின் இன்றைய தேவை

“கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்” என்ற பொன்மொழி வாசிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக விளக்குகிறது. இன்றைய இளையதலைமுறையினர் வாசிப்பதை நேசிப்பதில்லை. பாடப்புத்தகங்களைப் படித்து தேர்வெழுதி குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்று ஏதாவது ஒரு வேலைக்கு சென்றால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளனர். ஆனால் வேலைதேடிச் செல்லும் போதுதான் வாசிப்பின் அறுமை தெரியவருகிறது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தேர்வாளர்கள்  படித்தபாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காமல் பொதுஅறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவைகளையே சோதிக்கின்றனர். இவை அனைத்தும் எந்தப் பாடப்புத்தகத்திலும் இருப்பதில்லை. தன்னை சுற்றிலும் நடக்கும் விசயங்களைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும் இன்றைய வாசிப்பின் தேவையை.

புத்தகக் கண்காட்சி

இன்று பெரும்பாலன நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சிறிய அளவிலும் மற்றும் பெரிய அளவிலும் வருடம் தோரும் நடைபெருகின்றன. அங்கே குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாங்கிச் செல்கின்றனர். அங்கே குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், என அனைவருக்கும் ஏற்றபுத்தகங்கள் அனைத்துத் தலைப்புகளிலும் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தக விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் செல்கின்றன. காரணம் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு அனைவரும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே. என்னதான் டிஜிட்டல் வேர்ல்டு என்று சொன்னாலும் புத்தகத்தின் இடத்தை எவையும் பதிலீடு செய்ய இயலாது. எனவே வாசிப்பின் வரப்பிரசாதமாக இன்று புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன. புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளையும், மாணவர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு புத்தகங்களின் மீதான நாட்டத்தை உருவாக்க வேண்டும்.

சமூக வலைதளங்களின் தாக்கம்

முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை இன்றைய இளைய சமுதாயத்தினரின் பெரும்பாலான நேரத்தை விரயம் செய்கின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் இலவச இன்டெர்நெட் என்ற வலையில் வீழ்ந்து பெரும்பாலான நேரத்தை அதைப் பார்பதிலேயே செலவிடுகின்றனர். அனைவரும் வயது வேறுபாடின்றி செல்போனின் தொடுதிரைக்கு அடிமையாகிவிட்டனர். வீடு, பொதுவெளி என எங்கு பார்த்தாலும் அனைவரும் தங்களின் செல்போனை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதனால், இவர்கள் வாசிப்பு என்ற அறிவுத் தேடலை கற்றுக்கொள்ளாமலேயே போகின்றனர். உலக விசயங்களைத் தெரிந்துகொள்வதற்கும், நண்பர்களுடன் இணைப்பிலே இருப்பதற்கும் சமூக வலைதளம் முக்கியம்தான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் பொன்னான நேரத்தை தேவையில்லாத விசயங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் விரையம் செய்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டு அந்த அடிமை முறையிலிருந்து வெளியேற வேண்டும்.

முடிவாக, புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது. நம்முடைய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை நாம் வாசிப்பின் மூலம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றோம். நம்மிடமிருந்து எதிர்காலத் தலைமுறையினர் வாசிப்பின் மூலம் பெறவேண்டும். 
அதற்கு நாம் வாசிப்பை நேசிப்பதோடு நம் சந்ததிகளுக்கும் நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தகங்கள் வங்க செய்யும் செலவு, செலவு அல்ல மாறாக அது முதலீடே.  

சி. வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி. 

நன்றி:  கீற்று 

No comments: