வரலாறு எப்போதும் திரும்புகிறது. அதை நினைவில் கொள்ளாதவர்கள், பாடம் படிக்காதவர்கள் மீண்டும் பெருந்தவறுகள் செய்யும் சாபத்துக்குரியவர்கள்.
`ஏஜெண்ட் ஆரஞ்சு` என்பது ரசாயன முறையில் இலைகளை உதிர்க்கச் செய்யும் ஒரு தாவரக்கொல்லி. இதை அமெரிக்க ராணுவம் 1962 -1971 க்கு இடைப்பட்ட காலத்தில் வியட்நாம் போரில் பயன்படுத்தியது. வியட்நாம் மற்றும் கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இம்மருந்து தூவப்பட்டது.இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச. போரில் வியட்நாமியர்களுக்கு அரணாக விளங்கிய அடர்ந்த வெப்ப மண்டலக் காடுகளின் இலைகளை உதிர்க்க பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 19 மில்லியன் கேலன் அளவில் பல்வேறு ரசாயனக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதில் அதிகம் கையாளப்பட்டது இந்த ஏஜெண்ட் ஆரஞ்சு தான். ஆரஞ்சு நிற ஸ்டிக்கர்கள் ஓட்டிய ட்ரம்களில் வைக்கப்பட்டிருந்ததால் இதற்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்க பாதுகாப்புத் துறை போரில் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கிய மருந்துகள் இவை. வணிக பயன்பாட்டுக்காக அல்ல.
Ron Johnson/Journal Star/AP |
ஏஜெண்ட் ஆரஞ்சின் இரண்டு முக்கியமான உட்பொருட்கள் சம அளவிலான 2,4-D (2,4-dinitrophenylhydrazine) மற்றும் 2,4,5-T (2,4,5-tetrachlorophenoxyacetic acid) ஆகியவற்றின் கலவை. ரசாயனம் தயாரிக்கையில் உபபொருளாக கிடைக்கும் 2,3,7,8 tetrachloropdibenzo-p-dioxin (TCDD)யும் சிறிது சேர்க்கப்படும்.
ஏஜெண்ட் ஆரஞ்சு தூவப்பட்ட கொஞ்ச நேரத்தில் காய்ந்துவிடும் என்றாலும் மண், இலை, புல், மிருகங்கள், மனிதர்கள் போன்ற உயிரிகளின் மேல் நிரந்தர ரசாயனமாகப் படிந்து பெரிய அளவில் தீங்குகளை விளைவிக்கும். பல ஆண்டுகள் கழித்து இப்போதும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவச் சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
டையாக்ஸின்கள் அறிவியலுக்குத் தெரிந்த நச்சுப்பொருட்கள் அனைத்திற்கும் முதன்மையானதாக கருதப்படுபவை. குப்பைகள் எரிப்பது, டீசல் புகை வெளியேற்றம் மற்றும் ரசாயன உற்பத்திகளால் இது சுற்றுச்சூழலில் பெருகுகிறது. அதிலும் TCDD புற்றுநோய் ஏற்படுத்தும் அளவுக்கு இன்னும் மோசம்.
வியட்நாம் போரில் உயிர் தப்பிய அமெரிக்கர், வியட்நாமியர் இருவருமே புற்றுநோய் மற்றும் இதர மருத்துவச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுளனர். லுகேமியா (இரத்த வெள்ளை அணுக்களை பாதிக்கும் புற்றுநோய்), நீரிழிவு, Hodgkin’s disease ( கல்லீரல், கணுக்கள், மண்ணீரல் வீக்கம், இரத்த சோகை), நிணநீர்ச் சுரப்பியில் புற்றுநோய் ழ நடுக்குவாதம், கருப்பை புற்றுநோய், சுவாசப் புற்றுநோய் போன்றவை ஏஜெண்ட் ஆரஞ்சால் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளன.
நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி அவர்களது வாரிசுகளும் அபாயகரமான மருத்துவக் கோளாறுகளால் பாதிப்படைந்துள்ளனர். `Spina bifida` - வளரும் கருவில் முதுகுத் தண்டு முழுமையாக வளருவதைத் தடுக்கும் இந்த நோய் ஏஜெண்ட் ஆரஞ்சின் பக்கவிளைவாகும்.
மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
Glyphosate மான்சாண்டோவால் 1970ல் கண்டிபிடிக்கப்பட்டு 1974ல் அறிமுகப்படுத்தப்பட்ட ரசாயன களைப்பயிர்க் கொல்லியாகும். இது நிலத்தை உழுவதின் தேவையைக் குறைக்கும் என்று கூறியது மான்சாண்டோ. ( மண்ணை உழாமல் இருப்பதால் அதன் நீர் ஊடுருவும் திறன், உயிர்ம பொருள்களின் கொள்ளளவு, ஊட்டச்சத்து சுழற்சி ஆகியவை மேம்படும், மண்ணரிப்பு மட்டுப்படும், சிறு மண்ணுயிரிகள் வாழ வழி செய்யும். உரங்களின் தேவை குறையும் மற்றும் பைங்குடில் வளிமங்கள் (Greenhouse gases) விவசாய நிலங்களிலிருந்து வெளியேறுதலைக் குறைக்கும்.)
ஆனால், அளவுக்கதிகமான Glyphosate பயன்பாடு அதனைத் தாக்குப்பிடித்து வளரும் களைப்பயிர்களை உருவாக்கிவிட்டது. ஆரம்பத்தில், களைப்பயிர்களைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு இப்போது வேளாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக பரிணமித்து நிற்கிறது. 1995 வரை எந்தச் சிக்கல்களும் தென்படவில்லை. முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் 15 ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதன் விளைவாக பிரச்சினை தோன்றியது. பிறகு, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்காசிய நாடுகள், சீனா, மலேசியா எனப் பல்வேறு இடங்களில் இதே சிக்கல். எனினும், துரதிஷ்டவசமாக களைகளின் வளர்ச்சி Glyphosate-ன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தவே செய்தது.
பின்னர், Glyphosate-ஐ தாக்குப்பிடிக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைக் கண்டுபிடித்தனர். இதன்மூலம், முதலில் களைக்கொல்லியை உருவாக்கிவிட்டு பிறகு அந்தத் களைக்கொல்லியையே எதிர்கொண்டு வளரும் பயிர் வகையை உருவாக்கும் வேலையைச் செய்தது மான்சாண்டோ. விளைவாக, இப்போது பயிர்களைப் பாதிக்காமல் களைகளை மட்டும் அகற்ற முடியும் என்று வாக்களித்தனர்.
இதன்மூலம் அதிக Glyphosate விற்பனையைச் சாத்தியப்படுத்தியது மான்சாண்டோ. உதாரணமாக, 1970களில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயம்பாட்டில் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். பின்னர் களைகள் தடையின்றி வளரத் தொடங்கியதும் அதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ என்று அதிகரிக்கச் சொன்னார்கள். கூடவே மரபணு மாற்றப்பட்டப் பயிரும் அவசியமாக ஆகிப்போனது. ரசாயனக் கொல்லிகளின் தொடர் பயன்பாட்டால் மண் வளம் குறையும் என்பது நாம் அறிந்ததே. எனவே, எதிர்காலத்தில் உரங்களைக் கூட அவர்களே பரிந்துரைக்கும் வேளையையும் செய்வார்கள் என்பது தெளிவு.
மரபு சார்ந்த இயற்கை வேளாண் முறையில், பல வகையான நாட்டுரகப் பயிர்களைக் குறைந்த செலவில் விளைவித்து வந்த விவசாயிகள், இப்போது மான்சாண்டோ பயிர்களையும் அது பரிந்துரைக்கும் ரசாயனக் கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றையே பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன்மூலம் விவசாயிகளுக்கு நிதிச்சுமையும் நுகர்வோருக்கு உடல்நலச் சிக்கல்களும் அதிகரித்துள்ளது. ஆகையால், இது வளங்குன்றா தொழில்நுட்ப வளர்ச்சி (Sustainable Agricultural Development) என்றெல்லாம் சொல்வதற்கில்லை. மாறாக, பூமியின் உயிர் வகைகள் மேல் எந்த ஒரு பொறுப்போ அக்கறையோ இல்லாமல் வியாபார நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொலைநோக்குத் திட்டம் என்பதே சரி.
புகைந்து கொண்டிருக்கும் குண்டு
ஏஜெண்ட் ஆரஞ்சு 2,4-D ஐ தாக்குப்பிடிக்கும் பயிர்கள்:
டர்ஸ்பன், நபால்ம், 2,3-D போன்ற ரசாயன பூச்சுக்கொல்லிகளை விலைக்கு வாங்கிய `Dow Chemical` எனும் நிறுவனம் இப்போது ஏஜெண்ட் ஆரஞ்சை தாக்குப்பிடித்து வளரும் மரபணு வடிவம் மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்க அமெரிக்க அரசாங்கத்தை நிர்பந்தித்து வருகிறது. அதன் சோளம் மற்றும் சோயா பயிர்கள் 2,4-D தாவரக்கொல்லியின் தொடர் பயன்படுத்துதலையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவை. கூடவே, இந்த ரசாயனம் சுற்றுச்சூழலில் டையாக்ஸின்களின் எண்ணிக்கையை வேறு அதிகரிக்கும். அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் `Dow chemical` நிறுவனத்தின் சுற்று வட்டார நதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டையாக்ஸின் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ளதை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அந்த இடங்களில் வாழும் மக்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்கவும் காரணியாக அமைந்திருக்கிறது.
2,4,-D சோளமும் சோயாவுமே (மரபணு மாற்றப்பட்டது) ரசாயன களைக்கொல்லியை மிஞ்சும் களைகளுக்குத் தீர்வாக அமையும் என்று மிகையாக விளம்பரம் செய்யத் துவங்கியிருக்கின்றனர் இந்த `Dow chemical` நிறுவனத்தார். ஆனால், முதலில் மரபணு மாற்ற பயிர்கள்தான் இந்த களைகள் நீடித்து வளரவே காரணமாகி இருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.
Glyphosate-ஐ மிஞ்சும் களைகள் காலப்போக்கில் சாத்தியமாகியதைப் போல 2,4-D-ஐ மிஞ்சி வளரும் களைகள் தோன்றாது என்பதில் என்ன நிச்சயம்?
`Dow Chemicals`-ன் இந்த ஏஜெண்ட் ஆரஞ்சு பயிர்கள் ரசாயன ஆயுதப் போட்டியின் இன்னுமொரு விரிவாக்கம். இது இன்னும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் தோன்றவே வழி வகுக்கும். உணவு ஆதாரங்கள் கேள்விக்குள்ளாவதோடு புதுப்புது நோய்கள் தோன்றவும் சுற்றுச்சூழல் மேலும் சீர்கெடவும் செய்துவிடும்.
"அது படைப்பு அல்ல, உயிர் தரும் உன்னதம் அல்ல, அது அழிக்கும் ஆபத்து"
கார்த்திகேயன் ராமலிங்கம், முன்னால் வன சரக அதிகாரி , தமிழ்நாடு வன துறை, வனவியல் பட்டதாரி, முதுகலை பட்டதாரி டிப்ளோமா சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை - WWF இந்தியா, தற்பொழுது சுற்றுசூழல் ஆசிரியர் ஆக பணிபுரிகிறார்.
Great awareness article
ReplyDelete