உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்.இம்மூன்றுமே அடிப்படைத்
தேவைகள்.இவற்றுள் இருக்கும் இருப்பிடத்தில் சகல சௌகரியமும் இருக்க வேண்டும்
என எண்ணுவது மனிதனின் இயல்பு. தற்போதைய காலகட்டத்தில் சௌகரியத்திற்கு முதல் இடையூறாக அமைவது
மின்சாரத் தட்டுப்பாடு.
பிறரை கையேந்தி வாழ்க்கை நடத்தக்கூடாது என்று ஒருவர் எடுத்த அசாத்தியமான முயற்சியே இன்று அக்கிராமம் தலைதூக்கி நிற்க ஊன்றுகோலாக அமைந்திருக்கிறது.
கோயமுத்தூரிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஓடந்துறை எனும் இந்த ஊராட்சி.அந்த பஞ்சாயத்தில்1996 ஆம் ஆண்டு
பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பேற்றவர் திரு.சண்முகம் அவர்கள்.
பொருப்பேற்றவுடன் அனைத்துக் காரியங்களையும் முனைப்பாக கவனித்து
வந்தார்.
இரண்டு வருட காலம் கடந்தது.அவர் கண்டுபிடித்த மிகப்பெரிய
மாறுதல்,1996 இல் 2000 ரூபாயாக இருந்த மின்சாரக் கட்டணம் 1998 ல் பல
முன்னேற்றங்களை கொண்டு வந்ததால் 75000 ஆக உயர்ந்தது.இதுவே இந்த பெரிய
புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
இதற்கு தீர்வு கண்டறிய பஞ்சாயத்து மக்கள் மிகவும் பாடுபட்டனர். முதலில் தேவையற்ற மரக்கட்டைகள், மரத்தூள்களை எரித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை பைப்புகள் மூலமாக தண்ணீர் எடுக்கவும், தெரு விளக்கிற்கும் பயன்படுத்தினர். இதை உயிரிதொகுப்பு (Biomass)என்று அழைப்பர்.
இந்த கூட்டுரத்தில் தேவையில்லாத மக்கும்
குப்பைகளை வைத்தும் மின்சாரம் உற்பத்தி செய்தனர். இது 9 கிலோ வால்ட்
மின்சாரத்தை அளித்தது. ஆதலால் இந்தத் திட்டம் 50 சதவித மின்கட்டணத்தைக்
குறைத்தது. சில வருடங்களில் மரத்தின் விலை அதிகமாக உயர்ந்ததால் வேறொரு
திட்டத்தை கையாள முடிவெடுத்தனர்.
சூரிய ஒளியை பயன்டுத்தி
வீட்டுற்குத் தேவையான மின்சாரம் அமைக்கும் வழியை மேற்கொண்டனர். இந்தச்
சாதனத்தின் விலை 30000 ஆக இருந்தது. இது 2 கிலோ வால்ட் மின்சாரத்தை
அளித்தது. இதை கல்லாரில் பழங்குடி மக்கள் காலனியில் 25 வீடுகளிலும்,
வினோபாஜி நகரில் 40 தெருவிலும், பின்னர் புது காலனியில் 60 வீடுகளிலும்
விளக்குகள் பொருத்தப்பட்டது. ஒரு வீட்டில் 5 விளக்குகள் வீதம்
பொருத்தப்பட்டது. இது 75 சதவிதம் முன்னேற்றத்தைத் தந்தது. பின்னர்
கட்டப்பட்ட வீடுகளில் கட்டும்பொழுதே இந்த இயந்திரத்தைப் பொருத்தினர்.
மக்கள்
தொகை 5 மடங்காக அதிகரித்த நிலையில், 2005 ஆம் ஆண்டு பஞ்சாயத்து மக்கள்
அனைவரும் சேர்ந்து ரூபாய் 1 கோடியே 55 லட்சம் செலவில் பருவக்காற்று அதிகமாக
வீசும் இடமான உடுமலைப்பேட்டையில் உள்ள மைவாடி என்னும் இடத்தில் 1 ஏக்கர்
இடப்பரப்பில் காற்றாலையை அமைத்தனர்.
இந்த மொத்தத் தொகையில்,
40 லட்சம் ரூபாய் 5 ஆண்டுகளாக பஞ்சாயத்தில் சேமித்தத் தொகை. மீதத் தொகைக்கு
ஆவாரம்பாளையத்தில் உள்ள வங்கியில் (Central Bank of India)கடன் வாங்கினர்.
இது 350 கிலோ வோல்டில் இயங்கக் கூடியது. மொத்தமாக 6.75 லட்சம் யூனிட்
மின்சாரம் அளித்தது. இதில் 4 லட்சம் யூனிட்டே பஞ்சாயத்திற்கு போதுவாக
இருந்த நிலையில் மீதமுள்ள யூனிட்களை அரசாங்கத்திற்குக் கொடுத்து காசாக
பெற்று தாங்கள் வாங்கிய கடன்களைக் கட்டிக் கொண்டு வந்தனர். தற்போது மீதக்
கடன் தொகை வெறும் 5 முதல் 6 லட்சம் மட்டுமே.இது தேசிய அளவில் சுயமாக
ஆரம்பிக்கப்பட்ட முதல் காற்றாலையாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டம் ஓடந்துறை ஊராட்சியில் உள்ள வினோபாஜி நகர் மற்றும் கல்லார்புதூரில் உள்ள 9000 மக்களுக்குப் பயன்படுகிறது.
ஊர் தலைவரின் பங்களிப்பு மட்டுமன்றி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்
மொத்தம் 36 பேர் இணைந்து தேசிய ஊதிய ஊரக குடிநீர்த் திட்டத்தின் கீழ்
ரூபாய் 4 முதல் 5 லட்சும் செலவில் பஞ்சாயத்தின் உதவியோடு மணல் வடிகட்டி
மூலம் தண்ணீர் சுத்தம் செய்து மக்களுக்கு வழங்குகின்றனர். இந்தத் திட்டம்
சென்னை குடிநீர் வாரியம் மூலம் சுகம் மினரல் வாட்டர் எனும் பெயரில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தக் காற்றாலைத் திட்டத்திற்காக
மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஏலம் கேட்க வைக்கப்பட்டு குறைந்த தொகையில்
இந்தக் காற்றாலையை நிறுவினர். இது நிறுவ ஆரம்பித்து 1 வருடத்தில் ஊர்
மக்களிடம் பொருப்பை ஒப்படைத்தனர். வருடத்திற்கு 1 முறை பழுது பார்த்து
சரிசெய்து கொடுத்து வருகின்றனர்.
இந்தச் சூரிய ஒளியால் இயங்கும் கருவியை 10000 மணிநேரம் வரை சுலபமாக பயன்படுத்தலாம்.
"மின்சாரச் செலவும் இல்லை. குடிநீர்த் செலவும் இல்லை. அம்மாவின்
திட்டத்தின்கீழ் வீடும் கிடைத்ததால் வாடகை செல்வும் இல்லை. உணவுக்கும்
உடைக்கும் மட்டுமே செலவு செய்கிறோம்." என்று மக்கள்
கூறுகின்றனர்.
இது போன்ற திட்டத்தையே தமிழ்நாட்டிலுள்ள 12628
பஞ்சாயத்துகளும் கைப்பிடித்தால் மின்சாரத் தட்டுப்பாடு என்பது
தமிழ்நாட்டில் இருக்காது.பலவகையான வாய்ப்புகள் நம்முன் குவிந்து
கிடங்கின்றன.ஒவ்வொரு கிராமத் தலைவர்களும் முன்வந்து மக்களின்
நலனுக்காகவும் இயற்கையைப் பாதுகாப்பதற்காகவும் இம்மாதிரியான வழிகளைக்
கண்டெடுத்து செயல்பட வேண்டும்.
கிராமங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது இந்த ஓடந்துறை ஊராட்சி.
கு.கீர்த்தனா
Keerthana is a Contributing
Writer to The Lantern.
Nice article. Each village should draw inspiration from this model village.
ReplyDelete